டெல்லி: ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடையும் வாய்ப்பு இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் அதன் பாதிப்பு மிக அதிகமாக இருக்கிறது. அங்கு 16,758 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து 6,625 பாதிப்புகளுடன் குஜராத் 2ம் இடத்தில் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் வரும் 17 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் ஜூன், ஜூலை மாதத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைய வாய்பிருப்பதாக டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறி உள்ளதாவது: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எங்களுக்கு கிடைத்துள்ள புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும் போது, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கொரோனா தொற்று தீவிரமடைய அடைய வாய்ப்புள்ளது.
அப்போது தான் கோவிட் 19 தாக்கம் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பின் அவசியம் புரியும் என்றார். கொரோனா பாதிப்பால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருப்பது மட்டுமல்லாமல், பொருளாதாரமும் சரிவடைந்து வரும் நிலையில் ரன்தீப் குலேரியா கூறிய தகவல் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.