பீஜிங்: சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், 2 நகரங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 17ந்தேதி சீனாவின் வுகான் மாகாணத்தில்  முதன்முதலாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த தொற்று உலக நாடுகளில் பரவி இதுவரை 19லட்சத்துக்கும் அதிகமானோரை கொன்று குவித்துள்ளது. இந்த தொற்று பரவலை இதுவரை கட்டுப்படுத்த முடியாத நிலை நீடித்து வருகிறது. இதற்கு தற்போதுதான் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரத் தொடங்கி உள்ளது. ஆனால், கொரோனா தொற்று பரவல் குறித்து உண்மையான தகவலை தெரிவிக்க சீனா மறுத்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது சீனாவில் மீண்டும் தொற்று பரவல் தொடங்கி உள்ளது.  ஹூபே மாகாணத்தில் கடந்த வாரம் புதிதாக 300க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. குறிப்பாக,  ஷிஜியாஜுவாங் மற்றும் ஜிங்டாய் ஆகிய நகரங்களில் கொரோனா பாதிப்பு பரவலாக உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக,  குறிப்பிட் இரு நகரங்களிலும் கடும் கட்டுப்பாடுகளுடனான உரடங்கை அந்நாட்டு அரசு மீண்டும் அமல்படுத்தியுள்ளது.

ஷிஜியாஜுவாங், ஜிங்டாய் ஆகிய நகரங்களைச் சேர்ந்த மக்களும் நகரை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையின்றி வெளியே சுற்றும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது.

ஹுபே மாகாணத்தில் கடந்த  24 மணி நேர காலகட்டத்தில் மேலும் 14 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அங்கு இதுவரை தொற்று பாதிப்பு எண்ணிக்கை  137 ஆக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

சீனாவின் , வடகிழக்கில் லியோனிங் மாகாணத்தில் மேலும் மூன்று பேருக்கு தொற்று பதிவாகியுள்ளன, மூன்று வாரங்களுக்கு முன்பு முதல் வழக்குகள் வெளிவந்ததிலிருந்து மொத்தம் 84 ஆக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் புதிய வழக்குகள் எதுவும் இல்லை என்றாலும், இதே காலகட்டத்தில் பெய்ஜிங்கில் 31 வழக்குகள்  பதிவாகி உள்ளன.

இதுகுறித்து கூறியுள்ள சீனாவின் சுகாதாரத்துறை,  தற்போது  கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நபர்கள் அனைவரும் மற்ற பகுதிகளிலிருந்து இங்கு வந்தவர்கள் என்றும், வந்தவர்கள் மூலம் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு என்றும் இதைத் தடுக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும்  ஹூபே மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில், கொரோனா தொற்று பரவலை தடுக்க  மக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசி வழங்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.