டெல்லி: கோவிட் வைரஸ் -19, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் எதிரொலியாக, ஓய்வூதியதாரர்கள், அவர்களின் ஓய்வூதியங்களை தியாகம் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

கோவிட் வைரசால் இந்தியாவின் பொருளாதாரம் பெரும் சிக்கலில் இருக்கிறது. அனைத்து தரப்பிலும் தொழில்கள் முடங்கி இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் நாட்டின் நலன் கருதி ஓய்வூதியதாரர்கள் ஓராண்டுக்கு தங்களின் ஓய்வூதியத்தை அரசுக்கு விட்டு தர வேண்டும் என்கிறார் மூத்த வழக்கறிஞர் ஜார்ஜ் பூந்தோட்டம்.

இது குறித்து அவர், LiveLaw.in இணையதளத்தில் கட்டுரை ஒன்றை தீட்டியிருக்கிறார். அதன் முழு விவரம் வருமாறு: இந்தியாவில், பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. இந்த நிலை, நீதித்துறை, சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் காணலாம்.

2019/20ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ரூ. 48,565 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய ஓய்வூதிய கணக்கியல் அலுவலகத்தின் 2015-16 தரவுகளின்படி, இந்தியாவில் 12 லட்சம் ஓய்வூதியம் பெறுவோர்,குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், சுதந்திர போர் ஓய்வூதியம் பெறுவோர் உள்ளனர்.

இந்த ஓய்வூதியதாரர்களில் பெரும்பாலோர் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர், அவர்களில் சிலர் பணியில் இருக்கும்போது சம்பாதித்ததை விட அதிகமாக சம்பாதிக்கின்றனர்.

ஓய்வூதியத்தில், நீதிபதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஓய்வூதிய சலுகைகளாக ஒரு தொகையை பெறுகிறார்கள். இது ஒரு வங்கியில் ஒரு நிலையான வைப்புத்தொகையாக வைக்கப்பட்டால், அவர்களின் மாத வருமானத்திற்கு சமமாக இருக்கும்.

அதன்பிறகு தான் அவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. அதே நேரத்தில், தனியார் துறையின் வேலையிலிருந்து ஓய்வுபெறும் மற்றும் ஓய்வூதிய பலன் இல்லாமல் ஓய்வூதிய சலுகைகளில் திருப்தி அடைந்த மில்லியன் கணக்கானவர்கள் உள்ளனர்.

ஓய்வூதியதாரர்களில் பல வகைகள் இருந்தாலும் அவர்கள் எந்த பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் ஆண்டுக்கு சராசரியாக ரூ. 3,96,843 பெறுகின்றனர். அதாவது உத்தேசமாக மாதத்துக்கு 33,070 ரூபாயாகும்.

இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்ல வேண்டுமானால், 133.92 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 14 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இருக்கின்றனர் என்று புள்ளி விவரம் கூறுகிறது. ஆனால் அவர்களுக்கு ஓய்வூதிய செலவு 2019/20ம் ஆண்டின் பட்ஜெட்டில் 4.6 சதவீதம் ஆகும்.

அதிலும், 2020/21ம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் 14.4 சதவீதம் ஓய்வூதியதாரர்களுக்கு செலவாகும் என்று கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. அதாவது 55,558 கோடி ரூபாய் உத்தேசமாக செலவு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கு, அவர்களுக்கு என நீதித்துறையால் ஒருவித வேலைவாய்ப்பு அரசாங்கத்தால் வழங்கப்படும். சில ஓய்வு பெற்ற, ராஜினாமா செய்த நீதிபதிகள் வழக்கறிஞர்களாக உள்ளனர். நீதிமன்றத்தில் ஒரு முறை ஆஜராக தங்கள் மாத ஓய்வூதியத்தை விட 2 முதல் 4 மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். நடுவர் என ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஒரு அமர்வுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். IAS மற்றும் IPS அதிகாரிகள் உட்பட சமமான எண்ணிக்கையிலான அரசு ஊழியர்கள் உள்ளனர். அவர்களும் மாற்று வழிகளில் மாத வருமானம் ஈட்டுகின்றனர்.

இந்தியா இப்போது நிதி நெருக்கடியில் இருக்கும் நிலையில், அவர்கள் ஓய்வூதியத்தை கைவிட வேண்டாமா? சட்டப்பூர்வமாக, அவர்களின் ஓய்வூதியங்களை பெற, அவர்கள் ஒவ்வொருக்கு உரிமையும் உண்டு, ஆனால் தேசத்திற்கு ஆதரவாக குறைந்தபட்சம் அடுத்த ஒரு வருடத்திற்கு ஓய்வூதியத்தை கைவிட அவர்களுக்கான தார்மீகக் கடமை இருக்கிறது.

நீதிபதிகள் மற்றும் அரசு ஊழியர்களாக சேவையில் இருந்தபோது, ​​அவர்கள் தேசத்தால் நன்கு பாதுகாக்கப்பட்டனர். அவர்கள் இப்போது அரசுக்கு திருப்பி செலுத்துவதற்கான நேரம் இது. முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களாக ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இது சமமாக பொருந்தும்.

COVID-19 ஏற்கனவே உலகெங்கிலும் பொருளாதாரத்தில் மாற்ற முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா போன்ற ஒரு நாட்டை பொறுத்தவரை, COVID-19 மற்றும் ஊரடங்கு ஆகியவற்றால் அடுத்து ஏற்படும் விளைவுகள் என்பது கற்பனை செய்ய முடியாதது.

வேலையில் இருக்கும் போது கூட ஒரு நாளைக்கு 3 வேளை உணவு வாங்க முடியாத ஒரு பெரிய மக்கள் தொகை நாட்டில் உள்ளது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். ஊரடங்கின் போது, பொருளாதார நிச்சயமற்ற நிலையால் அவர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி பல நூறு கிலோ மீட்டர் தூரம் நடக்க வைத்திருக்கிறது.

ஆகையால், COVID-19 க்கு எதிரான இந்த போரில், மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் முன் வைத்த பல்வேறு முயற்சிகளில் அவர்களுக்கு ஆதரவாக, கிடைக்கக்கூடிய அனைத்து நிதிகளையும் நாம் திரட்ட வேண்டும்.

மாற்று வருமானம் கொண்ட அனைத்து ஓய்வூதியதாரர்களும், தமது ஓய்வூதியத்தை அரசுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும். அடுத்த ஒரு வருடத்திற்கான ஓய்வூதியத்தை கைவிட்டால், COVID-19ன் விளைவாக இப்போது எதிர்கொள்ளும் பொருளாதார சவாலை சமாளிக்க தேவையான நிதி ஆதாரங்கள் தேசத்திற்கு இருக்கும்.

குரூப் 4 பணியாளர்களைத் தவிர மற்ற அனைத்து ஓய்வூதியதாரர்களும் ஒரு வருடத்திற்கு தலா ரூ.100 பங்களிப்பு செய்தால், நாடு நிதி நெருக்கடியை சமாளிக்கும். பொருளாதார நடவடிக்கைகள் தடை காரணமாக, செலவுகள் அதிகரித்து வருவதால், மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் பணிபுரியும் பணியாளர்களின் வழக்கமான ஊதியத்தை இழக்க நேரிடும்.

COVID-19 க்கு எதிரான இந்த போரில் உண்மையான வீரர்கள் என்றால் அரசு ஊழியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் ஆகியோர் தான். சொற்களை விட செயல்கள் சத்தமாக பேசப்படும் என்பதால், நாம் அனைவரும் முன்னேறி, தேச சேவையில் தங்களது பங்கைச் செய்ய வேண்டிய நேரம் இது. இந்த முயற்சி நீதித்துறையிலிருந்து வரட்டும் என்று அந்த கட்டுரையில் கூறி இருக்கிறார்.