கோவை: கோவை அருகே இல்லாத கொரோனாவை இருப்பதாக கூறிய மாநகராட்சியை கிண்டல் செய்து, குடும்பத்தினர் பேனர் வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் வேகம் இன்னமும் ஓயவில்லை. சென்னையில் உச்சக்கட்டத்தில் இருந்த பாதிப்பு இப்போது மற்ற மாவட்டங்களை காட்டிலும் கோவையில் அதிகரித்து வருகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இல்லாத கொரோனாவை இருப்பதாக கூறிய கோவை மாநகராட்சியை கிண்டல் செய்து, குடும்பத்தினர் பேனர் வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:  பீளமேடு ஹோப் காலேஜ் அருகே ஒரு வீட்டில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 25ம் தேதி இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்ததாக தெரிகிறது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 1ம் தேதியன்று கோவை மாநகராட்சி தரப்பில் இருந்த வந்த ஊழியர்கள் உயிரிழந்தவரின் வீட்டில் உள்ள 4 பேரிடம் கொரோனா பரிசோதனை எடுத்துள்ளனர்.

அதன் முடிவில் 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என்று கூறி, அந்த வீட்டையும், அந்த பகுதியையும் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவித்தனர். அதன் பிறகு, பிரபலமான தனியார் பரிசோதனை ஆய்வுக் கூடத்தில் 4 பேரும் சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். அதில் நால்வருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளதாக தெரிகிறது.

ஆனால் தொற்று இல்லாதவர்களுக்கு கொரோனா இருப்பதாக கூறி அசிங்கப்படுத்திய கோவை மாநகராட்சிக்கு தங்கள் ஆதங்கங்களை தெரிவிக்க அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள்  அசிங்கப்படுத்தியதாக கூறி பேனர் வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா இல்லாத தங்களை, கொரோனா இருப்பதாக மாநகராட்சி அசிங்கப்படுத்தியதாகவும், அதன் காரணமாக அருகில் வசிப்பவர்களும் தங்களை ஒதுக்கி வைப்பதால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.

ஏற்கனவே கொரோனா இல்லாத பல நபர்களுக்கு தொற்று இருப்பதாக கூறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் கோவை மாநகராட்சியின் இந்த செயல்பாடு பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்கள் மத்தியில் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.