கொரோனா பாதிப்பை குறைக்க ஊரடங்கு பயனுள்ளதாக இருந்தது: ஐசிஎம்ஆர் தகவல்

--

டெல்லி: கொரோனா ஊரடங்கு பயனுள்ளதாக இருந்தது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் பல்ராம் பார்கவா தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தற்போது கொரோனா தொற்றின் 2வது அலை வீசத் தொடங்கியிருப்பதாக, எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா கூறியிருந்தார்.

அவரது கருத்துக்கு மறுப்பு தெரிவித்து ஐசிஎம்ஆர் இயக்குனர் பல்ராம் பார்கவா கூறி இருப்பதாவது: நாட்டில் கொரோனாவை தடுக்க  அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு பயனுள்ளதாக அமைந்தது.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கொரோனா பாதிப்பு காரணமாக பாதிப்புகளும், பலி எண்ணிக்கையும் அதிக எண்ணிக்கையில் உள்ளன. நாம் அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டோம். இங்கு கொரோனா அதிகரித்துள்ள போதிலும், இறப்பு எண்ணிக்கை அதிகம் பதிவாகவில்லை.

கொரோனா பாதிப்பு விகிதம் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் நோக்கம் இதுதான். எனவே இந்த முழு ஊரடங்கு பயனுள்ளதாக அமைந்தது என்று கூறியுள்ளார்.