மலேசியாவில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை

 

கோலாலம்பூர் :

லேசியாவில் நேற்று உள்ளூர் மக்கள் யாருக்கும் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்த 5 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக அந்நாட்டு சுகாதார இயக்குநர் ஜெனரல் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இதுவரை மலேசியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,240 ஆகவும், சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 183 ஆகவும் உள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்த ஐந்து பேரில் மலேசிய நாட்டைச் சேர்ந்த இரண்டு பேருக்கு தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது. இதில் ஜப்பானில் இருந்து சரவாக் நகருக்கு வந்த நான்கு பேருக்கும் பங்களாதேஷில் இருந்து சிலாங்கூருக்கு வந்த ஒருவருக்கும் நோய்த் தொற்று இருந்தது.

உள்நாட்டில் நேற்று எந்த ஒரு நபருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக பதிவாகவில்லை, இதற்கு முன் ஜூலை மாதம் 14 ம் தேதி உள்நாட்டில் எந்தவொரு தொற்றும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரசிலிருந்து இதுவரை 8,932 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர், இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 96.7 சதவீதமாகும்.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) இதுவரை ஏழு பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவற்றில் நான்கு பேருக்கு சுவாச உதவி தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

மேலும், இதுவரை கொரோனா வைரசுக்கு 125பேர் மரணமடைந்துள்ளதாகவும் இது மொத்த பாதிப்பில் 1.35 சதவீதம் என்றும் அவர் கூறினார்.