மிசோரமில் டிசம்பர் 31ம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது: இணைய வழியில் வகுப்புகள் நடத்த அனுமதி

அய்ஸ்வால்: கொரோனா தொற்று எதிரொலியாக, நடப்பாண்டு இறுதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என்று மிசோரம் அரசு அறிவித்து உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது மாநிலங்களில் நிலவும் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி மிசோரமில் அக்டோபர் 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் மாணவர்களிடையே தொற்று பாதிப்பு அதிகரித்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது. இந் நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டு உள்ளது.

அதன்படி, நடப்பாண்டு இறுதி வரை பள்ளிகள் திறக்கப்படாது மாநில கல்வித்துறை அமைச்சர் லால்சந்தம ரால்டே தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஆனால், அதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.