டெல்லி: இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி  செய்யப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு தகவல் தெரிவித்து உள்ளது. மேலும், அவர்கள் அனைவரும்  தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர் என்றும்  ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

இங்கிலாந்தில் புதியவகையிலான கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. இந்த தொற்றானது சாதாரண வைரசை விட 70% வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து உலக நாடுகள், இங்கிலாந்துக்கு விமானம் மற்றும் கப்பல் சேவைகளை நிறுத்தி இருப்பதுடன், தங்களது நாடுகளிலும் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளன.  பல நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்தில் இருந்து  தாயகம் திரும்பியவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த  நவம்பர்  மாதம் 25 முதல் டிசம்பர் 23 வரை பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய அனைவருக்கும் சோதனை நடத்தப்பட்டது. சுமார்  33,000 பேருக்கு சோதனை நடத்தப்பட்டதில்,  114 பேருக்கு கொரோனா உறுதியானது.  அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களின் ரத்த மாதிரி, உருமாறிய கொரோனா சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதில், 6 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பரவி இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் தனித்தனி அறையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ நிபுணர்களால் கண்காணிக்கப்பட்டு வருவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் உள்ள நிம்ஹான்ஸில் இங்கிலாந்து திரும்பியவர்களின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் 3 பேருக்கு லண்டன் கொரோனா இருப்பது உறுதியாபகி உள்ளது. அதுபோல,  ஹைதராபாத்தின் செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலுக்கான மையத்தில் இரண்டு மற்றும் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்தில் ஒருவர் என மொத்தம் 6 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.