நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் எம்.பி.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்: சபாநாயகர் அறிவிப்பு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் எம்.பி.க்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்றத்தின் மழைக்கால அமர்வு தொடங்குவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொரோனா சோதனைகளை எடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணியாளர்கள், குடும்ப உறுப்பினர்களும் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறி உள்ளார்.  அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா, சுகாதார அமைச்சின் இணைச் செயலாளர் லவ் அகர்வால் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மருத்துவர் ஆகியோருடன் நாடாளுமன்ற அமர்வுக்கான ஏற்பாடுகளை ஓம் பிர்லா ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் டெல்லி அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) அதிகாரிகளும் கலந்து கொண்டனர். சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழி காட்டுதல்களின்படி உறுப்பினர்களின் இருக்கைகள் இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிகபட்ச பாதுகாப்பை வழங்க மற்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், 18 நாள் நாடாளுமன்ற மழைக்கால அமர்வு செப்டம்பர் 14ம் தேதி தொடங்குகிறது.