புதுடில்லி :

மெரிக்க அரசு கொரோனா பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்களின் ‘ஹெச்-1பி’  விசா காலாவதி காலத்தை நீட்டிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க நிறுவனங்கள் ‘ஹெச்-1பி’  விசா மூலம் வெளிநாட்டு வல்லுனர்களை பணிக்கு அமர்த்திக் கொள்கின்றன. இந்நிலையில் கொரோனா பிரச்னையால் பல நிறுவனங்கள் பணியாளர்களுக்கு ‘லே ஆப்’ எனப்படும் கட்டாய விடுப்பு அளித்து வருகின்றன. அவை ஊழியர்களை எப்போது பணிக்கு அழைக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில் ‘ஹெச்-1பி’  விசா வைத்துள்ளோர் வேலையிழக்கும்பட்சத்தில் அடுத்த அறுபது நாட்களில் புதிய வேலை தேடிக் கொள்ள வேண்டும். தவறினால் அவர்களின் விசா காலாவதியாகி விடும் என்ற விதிமுறை உள்ளது.

தற்போதைய சூழலில் அமெரிக்கா கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் புதிய வேலை கிடைப்பது சுலபமல்ல என்பதால் ஏராளமான வெளிநாட்டு பணியாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.குறிப்பாக அமெரிக்காவுக்கு ‘ஹெச்-1பி’  விசாவில் செல்வோரில் பெரும்பான்மையானோர் இந்தியர்கள் என்பதால் அவர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதையடுத்து ‘ஹெச்-1பி’  உள்ளிட்ட விசாக்களின் காலாவதி பிரச்னை குறித்து மத்திய வெளியுறவு செயலர் ஹர்ஷ் ஷிரிங்லா அமெரிக்க வெளியுறவு துறை துணை அமைச்சர் ஸ்டீபன் பீகனுடன் தொலைபேசியில் பேசி கவலை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ‘ஹெச்-1பி’  விசா காலாவதி காலத்தை 60 நாட்களில் இருந்து 180 நாட்களுக்கு நீட்டிக்க கோரி ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பணியாளர்கள் அமெரிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்நிலையில் அமெரிக்க அரசு ‘ஹெச்-1பி’  விசா காலாவதி காலத்தை நீட்டிப்பது குறித்து பரிசீலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.