கொரோனா தடுப்பு மருந்து இறுதிப் பரிசோதனை – 10 நாடுகளுடன் பேசியுள்ள இந்திய நிறுவனம்!

புதுடெல்லி: ஒரு அரசு ஏஜென்சியுடன் இணைந்து தான் தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பு மருந்து தொடர்பாக, ஆர்வமுள்ள 10 நாடுகளுடன் பேசியுள்ளதாக தெரிவித்துள்ளது இந்தியாவின் பாரத் பயோடெக் என்ற நிறுவனம்.

ஐதராபாத்திலுள்ள அந்நிறுவனம், அது தயாரித்துள்ள தடுப்பு மருந்துக்கான கடைசி கட்ட பரிசோதனையை மேற்கொள்ள, இந்தவாரம்தான் இந்திய அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுள்ளது. அந்த தடுப்பு மருந்திற்கு பெயர் கோவாக்சின்.

மொத்தம் 1000 நபர்களிடம் நடத்தப்பட்ட அந்த மருந்தின் முதல் இரண்டுகட்ட பரிசோதனைகள், எந்த விரும்பத்தகாத விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி சோதனைக்கு உள்ளானவர்களில் 90% பேரின் உடலில், கோவிட்-19 வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடிகள் உருவாவதாக கூறப்பட்டுள்ளது.

எனவே, இந்த மருந்திற்கு தற்போது இறுதிகட்ட பரிசோதனை நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்தியாவின் ஐசிஎம்ஆர் உதவியுடன் இந்த தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்பட்டது.

“மொத்தம் 10க்கும் மேற்பட்ட நாடுகளுடன், இந்த இறுதிக்கட்ட பரிசோதனை குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளோம்” என்று தெரிவித்தார் அந்நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ஒருவர்.