கொச்சின்: கொரோனா தடுப்பு மருந்து, இந்தாண்டின் அக்டோபர் மாதத்தில்  உலக சந்தையைப் பரபரப்பாக்கும் என்றுள்ளார் புகழ்பெற்ற செரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியாவின் குழு ஏற்றுமதி-இறக்குமதி பிரிவு இயக்குநர் புருஷோத்தமன் நம்பியார்.
இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் உலகின் பெரிய தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனமான செரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, கோவிட்-19 வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அந்தத் தடுப்பு மருந்து ஒரு யூனிட்டிற்கு ரூ.1000 என்பதாக விலை நிர்ணயம் செய்யப்படுகிறது மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளின் மூலம், செரம் நிறுவனம் வருவாய் ஈட்டும் என்றார் அவர்.
இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பு மருந்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனமாக திகழும் செரம் இன்ஸ்டிட்யூட், தனது தடுப்பு மருந்துகளை 170க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
இந்த உலகில் பிறக்கும் 3இல் 2 குழந்தைகள் இந்த நிறுவனத்தால் தயாரிக்கப்படும் குறைந்தபட்சம் 1 தடுப்பு மருந்தையாவது தம் வாழ்நாளில் எடுத்துக்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மராட்டிய மாநிலம் புனேயில் 110 ஏக்கர் பரப்பளவில் இந்நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.