நியூயார்க்: சீனாவில் கோவிட்-19 வைரஸ் தொற்று கண்டறியப்படுவதற்கு ஒருவார காலம் முன்னதாகவே, அமெரிக்காவில் தொற்று கண்டறியப்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா பரவலால், உலகளவில், அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இன்றைய நிலையில் திகழ்கிறது அமெரிக்கா.

அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது; சீனாவில், முதல் கொரோனா தொற்று நோயாளி கண்டறியப்படுவதற்கு ஒருவாரம் முன்பாகவே, அமெரிக்காவில் கண்டறியப்பட்டு விட்டார் முதல் நோயாளி.

சீனாவில், வூஹான் முனிசிபல் சுகாதார கமிஷன் அளிக்கும் தகவலின்படி, கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிதான், அங்கு முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார்.

ஆனால், அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை ஆய்வுசெய்ததையடுத்து, அங்கு, சீனாவுக்கு முன்பாகவே தொற்று இருந்தது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இதன்படி பார்க்கையில், சீனாவிலிருந்து வைரஸ் பரவுவதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் முன்னதாகவே, உலகளவில் அந்த வைரஸ் பரவல் நிகழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.