ராஜஸ்தான்:
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நேற்று “பதாரோ மாரே தேஷ்” டிஜிட்டல் கொரொனா இசை நிகழ்ச்சி தொடரை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி மாநில நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஆதரவாக, ராஜஸ்தானை சேர்ந்த பாடகி மனேஷா ஏ அகர்வாலுடைய அர்பன் அறக்கட்டளையின் ஒரு முயற்சியாகும்.

இதில் புகழ்பெற்ற பல கலைஞர்கள் பங்கேற்கின்றனர், முதலமைச்சர் அசோக் கெலாட், இந்த நிகழ்வு பல மாதங்களாக, தங்களுடைய வழக்கமான வாழ்வாதாரத்தை இழந்த கலைஞர் சமூகத்தை ஆதரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளதாவது: நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக தங்களுடைய கலையை மட்டுமே நம்பி இருக்கிறார்கள், இது போன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாட்டுப்புற கலைஞர்களை ஆதரிப்பதற்கான தனித்துவமான யோசனை இது என்று நான் நினைக்கின்றேன், இத்தகைய முயற்சிகள் மாநிலத்தின் கலையை மேம்படுத்த முக்கியமான பங்கு வகிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக பேசிய பாடகி மனேஷா ஏ அகர்வால் தெரிவித்துள்ளதாவது: இந்த முயற்சியை ஆதரித்த முதலமைச்சர் அவர்களுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம், அவர் எப்பொழுதும் மாநிலத்தின் கலை மற்றும் கலாச்சாரத்திற்கு ஊக்கமளித்து வருகிறார், மேலும் அவருடைய இந்த ஆதரவானது நாட்டுப்புற கலைஞர்களுக்கும், எங்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கின்றது… “பதாரோ மாரே தேஷ்” தொடரில் ஜோத்பூர், ஜெய்சல்மார் மற்றும் பார்மர் ஆகிய இடங்களைச் சேர்ந்த 70 நாட்டுப்புறக் கலைஞர்கள் இடம் பெறுகிறார்கள் என்று மனேஷா தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் 70 கலைஞர்களுக்கு அர்பன் அறக்கட்டளை நிதி உதவி வழங்கியுள்ளது. இந்த அறக்கட்டளை, மாநிலத்தின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களை சென்றடையும் முயற்சிகளை தொடரும் எனவும் மனேஷா ஏ அகர்வால் தெரிவித்துள்ளார்.