புதுடெல்லி:

கொரோனாவால் உலகளவில் மோசமாக பாதித்த நாடுகள் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயினை ஒரே நாளில் பின்னுக்கு தள்ளிவிட்டு, 5வது இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது.

தற்போது, இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 43 ஆயிரமாக உயர்ந்துள்ளது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மிகத் தீவிரமாக பரவி வருகிறது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்தில் வைரஸ் தொற்றின் தீவிரம் தணியத் தொடங்கிய நிலையில், இந்தியா, ரஷ்யா, பிரேசில் போன்ற நாடுகளில் கடுமையாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவைப் பொறுத்த வரையில், கடந்த மாதம் 24ம் தேதி, 1 லட்சத்து 38 ஆயிரத்து 526 பேருக்கு பாதிப்பு என்ற எண்ணிக்கையுடன், உலகளவில் மோசமாக பாதித்த நாடுகள் பட்டியலில் டாப்-10 இடத்தில் இடம் பிடித்தது. இந்நிலையில், இரண்டே வாரத்தில் தற்போது இத்தாலி, ஸ்பெயினை ஒரே நாளில் முந்தி 5வது இடத்தை பிடித்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று காலையுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலியானோர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 9,887 பேர் புதிதாக வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், 294 பேர் இறந்ததாக கூறப்பட்டது. இந்த புள்ளி விபரத்தின்படி, இத்தாலியை பின்னுக்கு தள்ளிவிட்டு உலகளவிலான பாதிப்பில் 6வது இடத்துக்கு இந்தியா வந்தது.

அடுத்த 4, 5 நாட்களில் இங்கிலாந்தையும் இந்தியா முந்திவிடும். மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. ஆனால், பாதிப்பு அதிவேகமாக இருக்கிறது. இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி பலியானோரின் மொத்த எண்ணிக்கை 6,642 ஆக இருந்தது. பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 72 பேர் குணமடைந்து உள்ளனர். இன்னும் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 942 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.