திருப்பூர்:
திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரோனா பரவாத வகையில் பரிசோதனை மேற்கொள்ள கூடிய கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரோனா பரவாத வகையில், பரிசோதனை மேற்கொள்ள கூடிய, கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் துவங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், திருப்பூரில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், குழுக்கள் உருவாக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும், 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் ஆவர். இவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொண்டதில் அதில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 13 பேரும் ஆண்கள்.

இதில் திருப்பூர் மங்கலம் பகுதியை சேர்ந்த 52 மற்றும் 45 வயதுடைய 2 பேர், அவினாசி அருகே உள்ள தேவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த 32, 55, 30, 36 வயதுடைய 4 பேர், உடுமலை பகுதியை சேர்ந்த 63, 42, 32 வயதுடைய 3 பேர், தாராபுரம் பகுதியை சேர்ந்த 22, 60, 54, 14 வயதுடைய 4 பேர் என மொத்தம் 13 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 13 பேரும் கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த 13 பேர் உள்பட ஏற்கனவே உள்ள 6 பேர் என மொத்தம் 19 பேரும் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளும் உரிய நேரத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.