இந்தியாவில் ரூ.225க்கு கொரோனா தடுப்பூசி: சீரம் இன்ஸ்டிடியூட் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டெல்லி: கொரோனா தடுப்பூசி இந்திய மதிப்பில் ரூ.225க்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 200க்கும் மேலாக நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இந்தியா பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. முன்னணி மருந்து  நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சியில் தீவிரமாக உள்ளது.

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது. அந்த மருந்து, கிட்டத்தட்ட 1077 தன்னாலர்வர்களின் உடம்பில் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. மருந்து செலுத்தப்பட்ட 1077 பேருக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பது ஆய்வு முடிவில் தெரிய வந்தது.

சோதனை முயற்சியில் வெற்றி கிடைத்துவிட்டதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பின்னர், இந்தியாவில்  புனேவை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனமானது இந்த மருந்தை தயாரிக்க மத்திய அரசிடம் விண்ணப்பித்தது.அதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டது.

இதனிடையே மத்திய தர கட்டுப்பாட்டு அமைப்பின் சிறப்பு நிபுணர் குழு மேற்கொண்ட ஆய்வில்,  ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மனிதர்கள் மீது 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனை செய்ய அனுமதி வழங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிற்கு  பரிந்துரைக்க அது ஏற்கப்பட்டது.

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 2 மற்றும் 3ம் கட்ட பரிசோதனை செய்ய அனுமதி அளித்தது. சோதனை வெற்றி பெற்றால் மருந்தை கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவில் தயாரிக்க சீரம் நிறுவனம்  திட்டமிட்டது.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி ரூ.225 என்று விலை நிர்ணயம் செய்து அதன்படி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சீரம் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2021ம் ஆண்டின் தொடக்கத்தில்  இந்தியாவில் வசிக்கும் 10 கோடி பேருக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் கூறி உள்ளது.