புனே: ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற 40 வயது நபர் ஒருவர், தனக்கு மிக மோசமான பக்க விளைவுகள் ஏற்பட்டிருப்பதாக கூறி, ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு, சீரம் நிறுவனத்திற்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தடுப்பு மருந்து சோதனையில் பங்கேற்ற அவருக்கு, பெரியளவிலான நரம்புக் கோளாறு மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்தே, அவர் சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

மேலும், இவர் பெரிய தொகையை நஷ்டஈடாக கேட்டிருப்பதோடு, தடுப்பு மருந்து பரிசோதனையை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும் கோரியுள்ளார். அந்த மருந்து பாதுகாப்பானதல்ல என்பதால், அதன் பரிசோதனைக்கு தடை விதிக்கப்பட வ‍ேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான, புனேவில் அமைந்த சீரம் இன்ஸ்டிட்யூட், கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்குவதில், ஆஸ்ட்ராஸெனாக மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலை ஆகியவற்றுடன் இண‍ைந்து செயல்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.