சென்னை : கொரோனா தொற்று பரவலை தடுக்க பரிசோதிக்கப்பட்டு வரும் ‘கோவிஷீல்டு” தடுப்பூசியால் பக்கவிளைவு இல்லை;  என்றும், தமிழகத்தில் கொரோனா இறப்பு சதவீதம் 1.3 ஆக குறைந்துள்ளது என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கொரோனா தொற்று மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர்,  கிங்ஸ் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் கொரோனா நோயாளி களுக்கு சர்வதேச  அளவில் சிகிச்சை அளிக்கக்கூடிய பிளாஸ்மா சிகிச்சை மற்றும் உயிர்காக்கும் பிரணவாயு சிகிச்சை என உலகளாவிய சிகிச்சைகளை வழங்கி வருகிறது. இங்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் 90 சதவீதம் பேர்   குணமடைந்துள்ளனர். மேலும் கிங்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரை இங்கு 780 படுக்கைகள் உள்ளன.  அதில் 360 ஆக்ஸிஜனேட் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. உயர்தரமான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார்.
தொடரந்து பேசியவர்,  தமிழகத்தில் தற்போது 46 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களை குணப்படுத்தினால் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும்.சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை 5 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறப்பு சதவீதமும் 1.6ல் இருந்து 1.3 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை தடுக்க உலகளவில் முகக் கவசம் மட்டுமே மகத்தான ஆயுதமாக உள்ளது. அனைவரும் கட்டாயம் முகக்கவசம் பயன்படுத்தினால் தொற்றை குறைக்க முடியும்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியான  ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி எடுத்து கொண்டவர்களுக்கு எந்தவித பக்க விளைவும் இல்லை. அவர்கள் டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளனர். தடுப்பூசியை மட்டுமே நம்பி இல்லாமல் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.