‘கோ’ தானம்: பசுவை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள்

சு (கோ) மாடு எங்கெல்லாம் நன்றாக பராமரிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் லஷ்மி கடாட்க்ஷம் பெருகும் என்பது ஆன்றோர்களின் கூற்று.

பலனை எதிர்பாராமல் தன் ரத்தத்தையே பாலாக கொடுப்பது தான் பசு. அந்த பசுவில்தான் எல்லா தெய்வங்களும் குடி இருப்பதாக ஐதிகம். அதனால்தான் ஆலயங்களில் கூட பசுமாடுகளை வளர்த்து கோ பூஜை செய்கின்றார்கள் .

கோ தானம் செய்தால் கோடி புண்ணியம் என்று கூறுவார்கள். தானங்களில் பல்வேறு தானங்கள் இருந்தாலும் அதில் கோ எனப்படும் பசு தானத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. பசு தானம் செய்வது வம்ச விருத்தியை உறுதி செய்யும் என தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

ஒருவர் பசு தானம் செய்வதன் காரணமாக பாவ விமோசனம் பெறுவதாக இந்து புராணங்கள் கூறுகின்றன.

அதுபோல, பசு தானம் செய்பவன் தனது முன்னோர்கள் மோட்ச கதி அடைவார்கள் என்றும் நம்பப்படுகிறது.

அதன் காரணமாக புதுவீடு கட்டி குடி போகும்போது கோமாதா பூஜை செய்து வீட்டுக்குள் பசுவை அழைத்து வந்து பூஜை செய்வதை இந்துக்கள் வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

பசுவுக்கே முதல் மரியாதை செய்து, பசுவையும் கன்றையும், வீட்டுக்கு உரிமையான பெண்கள் மங்களப் பொருட்களோடு வீட்டுக்குள் அழைத்து,  பசுவை கன்றுடன் வீட்டைப் பார்க்கும்படி நிற்க வைத்து அதற்கு வீட்டு எஜமானர் அவர் மனைவியோடு பசுவின் அங்கங்களுக்கும் பொட்டு வைத்து, துணி, மாலை சாற்றி அரிசி, வெல்லம் கலந்த கலவையை கொடுத்து அகத்தி கீரையும் கொடுத்து வணங்குகிறார்கள். அதன்பிறகே கிரஹபிரவேச பூஜைகள் தொடங்குவது வழக்கம்.

அதுபோல பசுவை வணங்குவதால், அதை வணங்குபவர்களுக்கு  அதித பலன்கள் கிடைப்பதாகவும் நம்பப்படுகிறது.

பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. புராணங்களும் இதை உறுதிப்படுத்து கனிற்ன.

கோசாலைகளில் வளர்க்கப்படும் பசுக்களுக்கு அகத்திக் கீரை தருவதால் முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பது ஐதிகம்.

அதுபோல ஒருவர் செய்யும் கொலை, களவு போன்றவற்றால் உண்டாகும் பிரம்ம ஹத்தி தோஷங்கள் விலகிவிடும் என்பதும் நம்பிக்கை.

பித்ருதோஷங்கள் நீங்க,  16 அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

பசுவை பூஜிப்பது, பிரம்மா , வி்ஷ்ணு, ருத்ரன் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜிப்பதற்கு உரிய பலன்கள் கிடைக்கும்.

பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் ( கோக்ராஸம் ), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் ( கோகண்டுயனம் ) கொடிய பாவங்கள் விலகும்.

பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் ( லக்னம் ) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான காலமாகும்.

பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது 8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

” மா ” என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது.

பசு வசிக்கும் இடத்தில் , அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ , தர்ம காரியங்களோ 100 மடங்கு பலனைத் தரும்.

மனிதன் கண்களுக்கு புலப்படாத ம்ரத்யு , எமன் , எமதூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.

இதன் காரணமாகத்தான் வீடுகளில் வளர்க்கப்படும் பசுக்கள் இரவு நேரங்களில் விநோதமாக கத்தும் ஓசையை வைத்து, ஒருவருக்கு ஏற்பட உள்ள நல்லது கெட்டதுகளை பெரியார்கள் தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவார்கள்.

ஒருவர் இறந்த பின் பூலோகத்திற்கு அழைத்து செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை ( மலம் , சலம் , சளி , சுடு நீர் ஓடும் நதி ) கடக்க இயலாமல் தவிக்கிறது.

அப்போது, ஒருவர்  செய்த பசு தானம் அவர்களை அந்த துன்பத்திலிருந்து காப்பாற்றுவதாக நம்பப்படுகிறது.  அவர் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

உலகத்தில் விஞ்ஞானத்தால் எத்தனை பாதிப்பு நிகழ்ந்தாலும் , பசுக்கள் வசிக்கும் இடத்தி்ல் மட்டும் எவ்வித பாதிப்பும் இருக்காது.

எனவே ஒவ்வொருவரும் குலமாதாவாக போற்றப்படும்  கோமாதாவை பூஜிப்போம்…