பசுவின் மூச்சுக் காற்றில் ஆக்சிஜன் வெளி வருகிறது : உத்தரகாண்ட் அமைச்சர்
நைனிடால்
உத்தரகாண்ட் மாநில அமைச்சர் ரேகா ஆர்யா பசுவின் மூச்சுக்காற்றில் ஆக்சிஜன் வெளி வருவதால் பசுவை தேசத் தாய் என அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக அமைச்சராக பதவியில் உள்ளவர் ரேகா ஆர்யா. இவர் விலங்குகள் நலத்துறையின் அமைச்சர் ஆவார். நேற்று சத்தீஸ்கர் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் இந்திரா இருதயேஷ் கவனிக்காமல் விடப்படும் மிருகங்கள் குறித்த கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு அமைச்சர் ரேகா பதில் அளித்தார்.
அவர் தனது பதிலில், “மாநிலத்தில் ஆதரவற்று விடப்படும் மிருகங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அவை இன்னும் பத்து ஆண்டுகளில் மேலும் குறையும். இவ்வகையில் பசுக்கள் ஆதரவின்றி தெருவில் அதிகம் திரிகின்றன. அவைகளுக்கான கோசாலைகள் அமைப்பதில் அரசு தீவிரமாக உள்ளது.
முந்தைய பாஜக அரசில் பசுவதை சட்டம் மாநிலத்தில் முதல் முறையாக கொண்டு வரப்பட்டது. தற்போது அது நாடெங்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. பசுக்கள் மூச்சு விடுகையில் ஆக்சிஜனை வெளியேற்றுகின்றன. அதனால் மக்கள் வாழ்வுக்கு பசு இன்றியமையாதது ஆகும். இவ்வாறு ஆக்சிஜனை வெளியேற்றும் ஒரே விலங்கு பசு மட்டுமே.
அத்துடன் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு அடுத்த படியான உணவாக விளங்குவது பசுவின் பால் ஆகும். ஆகவே பசு என்பது நமக்கு ஒரு தாய் ஆகும். எனவே பசுக்களை தேசியத் தாய் என அறிவிக்க வேண்டும் என இந்த அரசு தீர்மானம் ஒன்றை இயற்றி உள்ளது. அந்த திர்மானம் விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்” என தெரிவித்தார்.