கழுதையை கொண்டு சென்றவர்களை தாக்கிய பசுக் காவலர்கள்

ர்மேர். ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநில பர்மேர் பகுதியில் பசு என நினைத்து கழுதையை கொண்டு சென்றவர்களை பசுக் காவலர்கள் தாக்கி உள்ளனர்.

வட இந்தியாவில் மாடுகளை கொண்டு செல்பவர்களை பசுக் காவலர்கள் தாக்கும் நிகழ்வு தொடர்ந்து நடக்கிறது.  இதற்காக மாநில, மத்திய அரசுகள் சட்டம் இயற்றினாலும்,  கண்காணிப்பை பலப்படுத்தினாலும் தாக்குதல் சம்பவங்கள் குறையவே இல்லை.   ஆனால் தற்போது ராஜஸ்தானில் கழுதையை கொண்டு சென்றவரையும், சரியாக பார்க்காமல் தாக்கி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜாலோர் மாவட்டத்திலுள்ள சைலா என்னும் ஊரில் உள்ளவர் காந்திலால் பகீல்.  இவர் ஒரு கழுதையை வளர்த்து வந்தார்.  ஒருநாள் அந்தக் கழுதை காணாமல் போய்விட்டது.  முந்தாநாள் (செப்டம்பர் 2) அன்று காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.  அத்துடன் தானும் சொந்த முயற்சியில் தேடி உள்ளார்.  கலூதி என்ற கிராமத்தில் தனது கழுதையை கண்டுபிடித்துள்ளார்.  காவல்துறையிடம் தகவலை சொல்லிவிட்டு ஒரு டெம்போவில் கழுதையை ஏற்றி பர்மேர் வழியாக சென்றுள்ளார்.

டெம்போவில் இருப்பது பசு என நினைத்து பசுக் காவலர்கள் அவரைக் காரில் துரத்தி உள்ளனர்.  டெம்போவை துரத்தி பிடித்து, கழுதையை ஏற்றிச் சென்றவர்களை கடுமையாக தாக்கி உள்ளனர்.  தாக்கி முடிந்த பின்தான் டெம்போவில் இருந்தது கழுதை என்பதையே பார்த்துள்ளார்கள்.  பெருத்த அவமானத்துடன் அங்கிருந்து தாங்கள் வந்த காரில் தப்பி ஓடி விட்டனர்.

காந்திலால் தாக்குதல் பற்றி போலீசில் புகார் அளித்துள்ளார்.  காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  போலீசார் தலைமறைவான பசுக்காவலர்களை தேடி வருகின்றனர்.