கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவுசெய்யும் கோ-வின் இணையதளம் மந்தகதியில் இயங்குகிறது

 

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் நாடு முழுதும் இன்று செயல் படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தை பிரதமர் மோடி தடுப்பூசி போட்டு்க்கொண்டு துவங்கி வைத்தார்.

45 முதல் 60 வயது வரை உள்ள பொதுமக்களில் இணைநோய்கள் இருப்பவர்கள் மட்டும் தற்போது இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கோ-வின் என்ற இணையதளத்தில் இவர்கள் முன்பதிவு செய்யவேண்டியது அவசியம்.

cowin.gov.in என்ற இணையத்தில் தங்கள் விவரங்களை பதிவேற்றும் பயனர்கள் தங்களுக்குனா தடுப்பூசி போட்டு்க்கொள்ளும் மருத்துவமனை, நாள், நேரம் ஆகியவற்றை தேர்ந்தெடுக்க வசதியுள்ளது.

மேலும், அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் போட்டுக்கொள்ள ரூ. 250 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தின் மூலம் எத்தனை பேருக்கு மருந்து செலுத்தப்பட்டுள்ளது என்பதை உடனுக்குடன் தெரிநதுகொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் இதில் பதிவு செய்த பலருக்கு ஒருமுறை கடவுசொல் (one time password – OTP) வரவில்லை என்றும் சிலர் தங்களுக்கு குறுஞ்செய்தி தாமதமாதமாக வந்தாகவும் கூறினர்.

சில பயனர்களுக்கு கோவின் சர்வரில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் சிறிது நேரம் கழித்து முயற்சிக்குமாறு அறிவிப்பு வந்ததாக கூறுகின்றனர்.

நாடு முழுக்க முதல் கட்டமாக 1.42 கோடி முன் கள பணியாளர்களுக்கும், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு மட்டுமே இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக பொதுமக்களுக்கு போடும் பணி இன்று நாடு முழுவதும் துவங்கியுள்ள நிலையில், கொரோனா தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தி நாடு முழுவதும் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் போடவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், பிளே ஸ்டோரில் உள்ள கோ-வின் செயலி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் யாரும் இதை பயன்படுத்த வேண்டாம், தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் கோவின் இணையதளத்தில் மட்டுமே பதிவேற்ற வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.