ராய்ப்பூர்

த்தீஸ்கர் மாநிலத்தில் உணவின்றியும், கவனிப்பார் இன்றியும் பசுக்கள் மரணம் அடைவது தொடர்ந்து வருகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் சுமார் 200 பசுக்கள் கோசாலை எனப்படும் பசுக்கள் பராமரிப்பு இல்லத்தில் மரணம் அடைந்தன.  மூன்று கோசாலைகளின் நடந்த இந்த மரணத்தை ஒட்டி சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் அனத்து கோசாலைகளையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.   இந்நிலையில் மேலும் பசுக்கள் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ராய்ப்பூருக்கு தெற்கே சுமார் 100 கிமீ தொலைவில் உள்ள தாம்தாரி மாவட்டத்தின் மாகர்லோட் என்னும் இடத்தில் வேதமாதா கோசாலை என்னும் பசுக்கள் பராமரிப்பு நிலையம் உள்ளது.  இதை மன்கரன் லால் சாகு என்பவர் நடத்தி வருகிறார்.  இங்கு சுமார் 100 பசுக்கள் உணவில்லாமலும் சரியாக பராமரிக்கப் படாமலும் மரணம் அடைந்துள்ளதாக அந்த கிராம வாசிகள் புகார் அளித்துள்ளனர்.    இதைத் தொடர்ந்து அம்மாவட்ட ஆட்சியாளர் பிரசன்னா அங்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

அங்கிருந்து 37 பசுக்கள் மிகவும் கவலைக்கிடமான நிலையில் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.  மேலும் ஆறு அல்லது ஏழு பசுக்கள் இரண்டு நாட்களில் இறந்திருந்ததும் ஏற்கனவே அங்கு 50 பசுக்கள் மரணம் அடைந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.   இது குறித்து விசாரணை நடத்த ஆட்சியாளர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த கோசாலையின் உரிமையாளர் சாகு கைது செய்யப்பட்டு அவர் மீது மிருகவதை தடுப்புச் சட்டம்,  மற்றும் கால்நடை பராமரிப்புச் சட்டம் ஆகியவைகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   விசரணையில் அவர் எந்த ஒரு உரிமமும் இல்லாமல் கோசாலை நடத்தி வந்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.