டில்லி

கொரோனா தடுப்பூசி அதிக அளவில் இந்தியாவில் உற்பத்தி ஆகும் என கேட்ஸ் ஃபவுண்டேஷன் தலைமை அதிகாரி மார்க் சுஸ்மான் தெரிவித்துள்ளார்.

உலகெங்கும் கொரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் அதற்கான தடுப்பூசி கண்டறியும் பணி தீவிரமாக உள்ளது.  இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த தடுப்பூசி பரிசோதனைகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகின்றன.  கொரோனா தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோகத்துக்கு பில் கேட்ஸ் மற்றும் அவர் மனைவி இணைந்து நடத்தும் கேட்ஸ் ஃபவுண்டேஷன் அமைப்பு நிதி உதவிகள் அளித்து வருகிறது.

இந்த அமைப்பு இந்திய அரசு, பயோடெக்னாலஜி துறை, மற்றும் அமைப்புடன் சேர்ந்து கிராண்ட் சேலஞ்ச் என ஒரு துணை அமைப்பைக் கடந்த 2012 ஆம் ஆண்டு உருவாக்கியது.   இந்த அமைப்பின் மூலம் விவசாயம், ஊட்டச்சத்து, சுகாதாரம், தாய் சேய் நலம் மற்றும் தொற்று நோய்த் தடுப்பு ஆகியவற்றுக்கான நலத் திட்டங்களை கேட்ஸ் ஃபவுண்டேஷன் நடத்தி வருகிறது.  அவ்வகையில் இந்த அமைப்பு இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியிலும் கவனம் செலுத்தி வருகிறது.

கேட்ஸ் ஃபவுண்டேஷன் தலைமை அதிகாரி மார்க் சுஸ்மான் செய்தியாளர்களிடம், “இந்தியா தன்னிடம் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி கண்டு பிடித்து வருகிறது.  அடுத்த வருடத்துக்குள் கொரோனா தடுப்பூசி வெளியாகி விடும்.  அநேகமாக அதிக அளவில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட உள்ளது. இது குறித்து இந்தியத் தனியார்த் துறை பங்களிப்பாளர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

இந்த தடுப்பூசி உலக அளவில் விநியோகம் செய்ய வேண்டிய அவசியத்தை நாங்கள் அறிவோம்.  எனவே வளர்ந்த நாடுகளுடன் வளர்ச்சி அடையாத நாடுகளுக்கும் சமமான அளவில் விநியோகம் நடத்தத் தேவையான அளவு நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம்.  இவை அனைத்தும் இந்தியத் தேசிய மருத்துவக் கழகம் மற்றும் சர்வதேச மருத்துவக்கழக ஒப்புதல் கிடைப்பதைப் பொறுத்துத் திட்டமிடப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.