ஐதராபாத்

ஐதராபாத் காந்தி மருத்துவமனையில் அகால மரணங்களை தடுக்க ஹோமம் வளர்ததற்கு சி பி ஐ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச அரசு ஏற்கனவே மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நோயை குணப்படுத்த ஜோதிடர்களின் ஆலோசனை மையம் அமைத்தது தெரிந்ததே.  இப்போது அதே வழியில் ஐதராபாத் நகரில் உள்ள காந்தி மருத்துவமனையில் அகால மரணம் நேராமல் பாதுகாக்க, மிருத்யுஞ்சய ஹோமம் நடத்தியுள்ளது.

மிருத்யுஞ்சய ஹோமம் என்பது அகால மரணங்களை தடுக்க செய்யப்படுவது.  காந்தி மருத்துவமனையில் பிரசவத்துக்கு வரும் பெண்கலில் பலர் மரணம் அடைவதும் பிறந்த குழந்தைகள் இறப்பதும் அதிகரித்து வந்தது.  அதனால் அங்கு பணிபுரியும் டாக்டர் அனுபமா என்பவரிடம் இது பற்றி அவருடைய நண்பர் ஒருவர் தெரிவித்ததையொட்டி, அவர் தனது மேலதிகாரிகளுடன் பேசி ஹோமம் நடத்தியுள்ளார்.

இந்த ஹோமத்தில் நான்கு புரோகிதர்கள் கலந்துக் கொண்டு நடத்தி வைத்தனர்.  இதில் பல பேராசிரியர்களும், மருத்துவ மாணவர்களும் கலந்துக் கொண்டனர்.  மரணங்களை தடுக்க நான்கு மணி நேரம் நடைபெற்ற இந்த யாகத்தில் அநேகமாக அனைத்து மருத்துவர்களும் கலந்துக் கொண்டதால், பல நோயாளிகள் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்ததை கண்ட மக்கள் கொதிப்படைந்தனர்.

இது குறித்து சி பி ஐ தலைவர்களில் ஒருவரான நாராயணா கருத்து தெரிவிக்கையில் “இது போன்ற நிகழ்வுகள் மருத்துவ தொழிலை வளர்க்காது.  கொல்லவே செய்யும்.  அது மருத்துவமனையா அல்லது தீய சக்திகளை விரட்டும் மடமா என்பதே விளங்கவில்லை” என்று கூறி உள்ளார்.

இது குறித்து ஜன விஞ்ஞான வேதிகா அமைப்பின் மாநிலத் தலைவர் சிரவேஸ்வர் ராவ், “மருத்துவர்கள் தங்கள் மூட நம்பிக்கைகள வளர்ப்பதை விட மருத்துவ அறிவை வளர்த்துக் கொள்வது நல்லது.  அரசு முறையாக நிதி ஒதுக்கீடு செய்வதும், பணியாளர்கள் தங்கள் பணியை ஒழுங்காக செய்வதும் மரண எண்ணிக்கையை குறைக்கும்.  இது போன்ற ஹோமங்கள் அல்ல” என கூறினார்