தஞ்சை பெரிய கோயிலில் நடக்கும் ஸ்ரீஸ்ரீ சிவசங்கரின் நிகழ்ச்சியை தடை செய்யக் கோரி சி.பி.எம். தலைமையில் ஆர்ப்பாட்டம்

ஞ்சை பெரிய கோயிலில் நடக்கும் ஸ்ரீஸ்ரீ சிவசங்கரின் நிகழ்ச்சியை தடை செய்யக் கோரி சி.பி.எம். தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் வாழும்கலை அமைப்பு, இன்றும் நாளையும் தஞ்சை பெரிய கோயிலில் “விஞ்ஞான பைரவம்” என்ற தியான நிகழ்ச்சியை நடத்துகிறது. இதற்ககாக பெரிய கோயிலின் பிரகராரத்தில் பெரும் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அவர்கள், “11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாரம்பரியமிக்க கலைப்படைப்பு தஞ்சை பெரி கோயில். இதை யுனெஸ்கோ நிறுவனமே அங்கீகரித்திருக்கிறது. இக்கோயில் தொல்லியில் துறை கட்டுப்பாட்டில் இருக்கிறது.

கோயிலுக்கும் அரசு நிகழ்ச்சிகள்தான் நடைபெறும். ஆனால் முதன் முறையாக வாழும்கலை என்ற தனியார் அமைப்புக்கு இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும்.  மேலும் இந் நிகழ்ச்சிக்கு வாழும் கலை அமைப்பு ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ.3000 கட்டணம் விதித்திருக்கிறது. ஆகவே இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும்” என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

அதே நேரம் வாழும் கலை அமைப்பினர், “தஞ்சை பெரிய கோயிலில் ஏற்கெனவே பல நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன. நாங்களும் தொல்லியல் துறை அறநிலையத்துறை ஆகியவற்றிடம் உரிய அனுமதி பெற்றே நிகழ்ச்சியை நடத்துகிறோம். இந்த தியான நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களில் விரும்பியவர்கள் அன்பளிப்பு அளிக்கலாம். மற்றபடி கட்டாய நன்கொடை வாங்கவதில்லை” என்று விளக்கம் அளித்துள்ளனர்.

கோயிலினுள் நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்ட கொட்டகை

இதற்கிடையே கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட் என்பவர், “வாழும்கலை அமைப்பினர் தஞ்சை பெரியகோயிலுக்குள் தியான நிகழ்ச்சி நடத்துவதை தடை செய்ய வேண்டும்” என்று கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த நிலையில் குறிப்பிட்ட நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி சி.பி.எம். கட்சி தலைமையில் தஞ்சை பெரிய கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னதாக சிவகங்கை பூங்காவில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக கோயில் வரை சென்றனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சி.பி.எம். தலைமையிலான இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், தமிழர் தேசிய பேரவை ஆகிய கட்சிகள் கலந்துகொண்டன.

போராட்டத்துக்கான காரணம் குறித்து  சி.பி.எம். கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் கோ. நீலமேகம் தெரிவித்ததாவது:

“ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தஞ்சை பெரிய கோயில், யுனெஸ்கோ அங்கீகரித்த பாரம்பரிய சின்னமாகும்.  இந்தக் கோயிலை கார்பரேட் சாமியாரான  ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு நிகழ்ச்சி நடத்த தொல்லியல் துறை அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

ஏனென்றால் இந்தக் கோயிலில் அரசு நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்த அனுமதி உண்டு. கோயில் வாசலில் இயங்கி வந்த பொம்மைகடைகளை, சட்டதிட்டத்தைக் காரணம் காட்டி ஒரே இரவில் அகற்றிய தொலல்லியல் துறை தற்போது கார்பரேட் சாமியாருக்கு கோயிலின் உள்ளேயே நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்திருக்கிறது.

தவிர ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நபருக்கு ரூ. 3000 வசூலிக்கிறார்கள்.

மேலும் ஏற்கெனவே ரவிசங்கர் யமுனை நதிக்கரையில் நடத்திய “உலகப் பண்பாட்டுத் திருவிழா” என்ற நிகழ்ச்சியால் நதிக்கரை சேதப்படுத்தப்படுத்தப்பட்டது என்று உச்சநீதிமன்றம் ரவிசங்கரின் வாழும்கலை அமைப்புக்கு ஐந்து கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்த நிலையில் அதே அமைப்புக்கு தஞ்சை பெரிய கோயிலில் நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிப்பதால் பாரம்பரியச்சின்னமான இந்தக் கோயிலுக்கு எந்தவித ஆபத்து ஏற்படுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது.

மேலும் டெல்டா மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்பட்டு தற்போது நிவாரணப்பணிகளில் சமூகசேவை அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது யாருக்கும் தெரியாமல் ரகசியமாக கோயிலில் நிகழ்ச்சியை நடத்துகிறது ரவிசங்கரின் வாழும்கலை அமைப்பு..

ஆகவே கோயில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை உடனே தடை செய்ய வேண்டும்” என்று  கோ.நீலமேகம் தெரிவித்தார்.