தேர்தல் வெற்றியால் பாஜக கொண்டாட எதுவுமில்லை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

டில்லி

குஜராத் சட்டசபை தேர்தல் வெற்றியால் பாஜக கொண்டாட ஏதுமில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் 99 இடங்கள் பெற்று பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.  அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியும் முன்பு இருந்ததை விட அதிகம் இடங்கள் பெற்றுள்ளன.  இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு அறிக்கை அளித்துள்ளது.

அந்த அறிக்கையில், “குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைத்துள்ளன.  ஆயினும் அந்தக் கட்சியின் வெற்றி எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.   சென்ற தேர்தலில் 115 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தற்போது 99 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.    அமித்ஷா கூறியபடி பாஜக 150க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறவில்லை.   எனவே அந்தக் கட்சிக்கும் கொண்டாட ஒன்றும் இல்லை.

குஜராத்தைப் பொறுத்தவரையில் மாற்றுத்திட்டத்துடன் அனைத்து எதிர்கட்சிகளும் கூட்டணி அமைத்திருந்தால்  பாஜக நிச்சயம் ஆட்டம் கண்டிருக்கும்.   ஹிமாசலப் பிரதேசத்தில் பாஜக வுக்கு எளிதில் வெற்றி கிட்டியுள்ளது.   வீரபத்ரசிங் நடத்திய ஊழல் ஆட்சி மற்றும் அரசின் முறைகேடுகள் பாஜகவுக்கு வெற்றியை தேடித் தந்துள்ளது.   இது பாஜகவின் உழைப்பால் கிடைத்த வெற்றி அல்ல” என கூறப்பட்டுள்ளது.