உச்ச நீதிமன்ற உத்தரவு : கேள்விக்குறி ஆகும் தமிழக தொழிலாளர்கள் வாழ்வாதாரம்!

சிவகாசி

ச்ச நீதிமன்றத்தின் பட்டாசு தடை உத்தரவின் விளைவால் சிவகாசியில் பல பட்டாசு தொழிற்சாலைகள் மூடப் பட்டுள்ளன.

உச்ச நீதிமன்றம் டில்லியில் மாசு ஏற்படுவதாகக் கூறி பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளது.   அதை சுட்டிக் காட்டி நாட்டின் பல பகுதிகளிலும் இந்த தடையை விரிவு படுத்த பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.    ஆனால் இந்த உத்தரவு டில்லியில் எந்த விளைவை ஏற்படுத்தி இருந்தாலும் தமிழ்நாட்டின் சிவகாசியில் எதிர்மறை விளைவை ஏற்படுத்தி உள்ளது.

குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசி நகரம் சென்னையில் இருந்து சுமார் 480 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.   இங்கு சுமார் 820 பட்டாசுத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.   சுமார் 8 லட்சம் மக்களுக்கு இந்த தொழிற்சாலைகளே வாழ்வாதாரமாக விளங்குகிறது.     இந்தியாவில் உற்பத்தியாகும் பட்டாசுகளில் 85% இந்த நகரத்தில் உருவாக்கப் படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு இங்குள்ள பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.  இது குறித்து தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் மாரியப்பன், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை ஏற்படும் அபாயம் உண்டாகி உள்ளது.    இந்தத் தொழிலில் அதிகம் முதலீடு செய்வது இயலாத காரியம்.   எனவே எங்களது விற்பனையாளர்கள் தங்களின் ஆர்டருடன் தரும் அட்வான்ஸ் தொகையை வைத்துத் தான் தொழிலை நடத்தி வருகிறோம்.    தற்போது விற்பனையாளர்கள் யாரும் ஆர்டரும் அளிக்கவில்லை,  அட்வான்சும் தரவில்லை.   அதனால் தொழில் நடத்துவதே கடினமாகி உள்ளது.

இதனால் இங்கு பல தொழிற்சாலைகள் மூடப் பட்டுள்ளன.   இதன் காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி இல்லாமல் உள்ளனர்.    அவர்கள் வாழ்வாதாரமே தற்போது கேள்விக் குறியாகி உள்ளது.   இது குறித்து நாங்கள் மட்டும் அல்ல இதனால் பாதிக்கப்படும் அனைவரையும் எங்களுடன் சேர்ந்து போராட அழைத்துள்ளோம்.   விற்பனையாளர்கள் மற்றும் எங்கள் தொழிலுக்கான பொருட்களை விற்பவர்கள் ஆகியோர் எங்களுடன் கைகோர்க்க தயாராக உள்ளனர்.

தீபாவளியின் போது பட்டாசுகளால் காற்று மாசுபடுவதாகக் கூறுபவர்கள் மற்றும் உள்ள பலவற்றை கவனிப்பதில்லை.   காற்று மாசுபடுவது என்பது பட்டாசுகளால் மட்டும் இல்லை.   தினசரி உபயோகிக்கப்படும் வாகனங்கள் உட்பட பல பொருட்கள் காற்றை மாசு படுத்துகின்றன.    ஆனால் பண்டிகை நாட்களில் மட்டுமே உபயோகப் படுத்தப்படும் பட்டாசுக்கு மட்டுமே தடை விதிக்க பலரும் விரும்புகின்றனர்.   இதனால் 8 லட்சம் தொழிலாளர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் ஏற்படும் வாழ்வாதார இழப்பை யாரும் கவனித்தில் கொள்வதிலை”  எனக் கூறி உள்ளார்.