தீவுத்திடல் பட்டாசு கடை அனுமதி விவகாரம்: தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை:

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி அளித்தது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.

ஆண்டுதோறும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு கடைகள் சென்னை தீவுத்திடலில் வைக்கப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் தீவுத்திடலில் வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி,  வரும் 19ம் தேதி முதல் 20 நாட்கள் தீவுத் திடலில் பட்டாசு கடைகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த எம். முனியன் என்பவர் உயர்நீதி மன்றத்தில், தமிழக அரசின் அனுமதியில் குறைபாடுகள் இருப்பதாக கூறி மனு தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,   தீவுத் திடலில் பட்டாசு விற்பனைக்கான டெண்டர் எடுத்தவர்கள்  விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என்றும்,  கடைகள் அமைக்கப்படவுள்ள தீவுத் திடலின் மற்றொரு பக்கம் பொருட்காட்சி, ஓட்டல்கள் போன்றவைகள் உள்ளன. இந்த இடத்திற்கும் பட்டாசு விற்பனைக்காக ஒதுக்கப்படும் இடத்திற்கும் குறைந்தது 70 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். இதை தீயணைப்பு துறை அதிகாரிகளும், சுற்றுலாத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும். ஆனால், இந்த விதிமுறைகள் எதையும் ஒழுங்காக கடைபிடிக்காமல் பட்டாசு கடைக்கு சென்னை மாநகராட்சி, போலீசார், தீயணைப்பு துறை, சுற்றுலாத்துறை, மற்றும் வெடிபொருள் தடுப்பு துறை அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர். இதன் காரணமாக விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரிக்க   நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத்  அமர்வு , இந்த மனுவுக்கு வரும் 24ம் தேதிக்குள் அரசு பதில் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

டந்த 2010 முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. பட்டாசு விற்பனைக்காக கடைகள் டெண்டர் விடப்படும். இதற்கான வழிமுறைகளை உருவாக்கி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2013 அக்டோபர் 7ம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி,  தீவுத் திடலில் பட்டாசு விற்பனைக்கான டெண்டர் எடுத்தவர்கள் தற்காலிக கடைகளை அமைக்க சென்னை போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெற வேண்டும்.

ஒவ்வொரு கடைகளும் தனித்தனியாக கடைகள் ஒரே வரிசையில் அமைக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு கடைக்கும் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். தீப்பிடிக்காத வகையில் மிகவும் பாதுகாப்பான முறையில் கடைகள் அமைக்கப்பட வேண்டும்.

விபத்து ஏற்பட நேர்ந்தால் உடனடியாக வெளியேறும் வகையில் அவசர வழி, ஆம்புலன் வசதி, முதல் உதவி கவுண்டர்கள் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.