24 மணி நேரமும் பட்டாசு வெடியுங்கள்!: பாஜக பிரமுகர் நாராயணன்

“தீபாவளி பண்டிகைக்கு 24 மணி நேரமும் பட்டாசு வெடியுங்கள்” என்று பாஜக பிரமுகர் திருப்பதி நாராயணன் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால் தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஏற்று காலையில் ஒரு மணி நேரமும் இரவு ஒரு மணிநேரமும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு நேரத்தை வரையறுத்துள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறுகிறர்களுக்கு ஆறு மாதம் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையே இந்துத்துவ ஆதரவாளர்கள், உச்சநீதிமன்ற தீர்ப்பை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மத ரீதியான பாரம்பரிய வழக்கங்களில்  நீதிமன்றம் தலையிடுவதாக விமர்சிக்கிறார்கள்.

இந்த நிலையில் பாஜக முக்கிய பிரமுகர்களில் ஒருவரான திருப்பதி நாராயணனை தொடர்புகொண்டு இது குறித்து கேட்டோம். அவர், நம்மிடம் தெரிவித்ததாவது:

“இந்தியா என்பது பன்முகம் கொண்ட நாடு.. இங்கு பல கலாச்சாரங்கள் பின்பற்றப்படுகின்ரன.  வட இந்தியாவில் தீபாவளி என்பது ராமன் ராவணனை கொன்றதை நினைவூட்டி கொண்டாடப்படுகிறது. மேலும் அன்று புதுக்கணக்கு துவங்கும் விழாவாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது.  அன்றைய தினம் மாலை புதுக்கணக்கைத் துவங்கி இரவு எட்டு மணிக்கு  பட்டாசு வெடித்துக்கொண்டாடுவார்கள். அதன் அடிப்படையில் இந்தத் தீர்ப்பை நீதிபதிகள் கொடுத்திருக்கலாம்.

ஆனால்  தென்னிந்தியாவில் நரகாசுரனை கிருஷ்ணன் வதம் செய்த நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.   அதிகாலையில் எழுந்து கங்கையில் நீராடியதாக  கருதி எண்ணெய்க்குளியல் முடித்து, நாள் முழதும்  பட்டாசுகளை கொளுதிக் கொண்டாடுவதே நம் வழக்கம்.

ஆக நம் தென்னிந்திய கலாச்சாரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இந்தத் தீர்ப்பு வெளிவந்துள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கது.

மேலும் நம்முடைய பிறந்த நாட்களைப் போல குறிப்பிட்ட தேதியில் தீபாவளி வருவதில்லை என்பதை நாம் உணரவேண்டும். பருவ நிலை மாற்றத்துக்கு ஏற்பத்தான் நம் பண்டிகைகள் அனைத்தும் கொண்டாடப்படுகின்றன.

நான் சென்ற வருடம் சொன்னது போலவே இந்த பருவகாலத்தில் கொசுக்களுடையே உற்பத்தி அதிகமாக இருக்கும். இந்த குளிர்ச்சியான பருவநிலையை குறைத்து கொசுக்களை அழிப்பதற்காகவே பட்டாசுகளைக்  கொளுத்தும் வழக்கம் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது.

ஏற்கெனவே இந்த கருத்தை  டில்லி உயர்நீதிமன்றத்தில் டில்லி அரசாங்கம் தெரிவித்திருந்து. இதை அப்போது டில்லி உயர்நீதிமன்றம் பொருட்படுத்தவில்லை. தற்போது   உச்சநீதிமன்றமும் கருத்தில் கொள்ளவில்லை.

நாராயணன்

வேண்டுமானால் பாருங்கள்.. தீபாவளிக்குப் பிறகு கொசுக்கள் குறையும் டெங்கு காய்ச்சலும் குறையும்.

உச்சநீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளை பலரும் பொருட்படுத்துவதில்லை. வழிபாட்டுத் தலத்தில் இருக்கும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் காற்று மாசை ஏற்படுத்துவதால் அவற்றை அகற்ற வேண்டும் என்று உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றம் பல முறை உத்தரவிட்டுள்ளன. ஆனால் அவை இன்னமும் அகற்றப்படவில்லை.

பிற மத வழிபாட்டு தலங்களில் அரசியல் கட்சிகள் தலையிட அச்சப்படும் நேரத்தில் இந்து மத வழிபாட்டு முறைகளில் கலாச்சார முறையில் பழக்கவழக்கங்களில் உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அவசரம் காட்டுவது கலாச்சாரத்துக்கு எதிரானது மட்டுமல்ல.. இந்து மதத்துக்கு எதிரானதும்கூட.

பட்டாசு வெடித்ததற்காக டில்லியில் ஒருவர் மீது வழக்கு பதியப்பட்டதையும் கண்டிக்கிறோம்.

உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று உத்தரவிட்ட போதும், நம் கலாச்சாரம் மரபை பின்பற்ற முனைப்பு காட்டி தமிழகம் முழுதும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினோம்.

அதேபோல  தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். இருபத்திநான்கு மணி நேரமும் பட்டாசு வெடிக்க வேண்டும்” என்று ஆவேசத்துடன் சொல்லிமுடித்தார் நாராயணன்.