பிந்த்:

மத்திய பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டம் லோஹரிகாபுரா கிராமத்தை சேர்ந்தவர் கப்டன் வால்மீகி (வயது 60). தலித். இவர் நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி குவாலியர் மருத்துவமனையில் இறந்தார்.

இறுதி சடங்குகள் செய்ய அவரது உறுவினர்கள் உடலை சொந்த கிராமத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது உயர் சமூகத்தை சேர்ந்தவர்கள் இறுதி சடங்குகளை கிராம சுடுகாட்டில் நடத்தவிடாமல் தடுத்துள்ளனர். இதனால் வேறு வழியின்றி உடலுக்கு வீட்டின் அருகிலேயே இறுதி சடங்குகளை செய்து, அவரது உடலுக்கு சிதை மூட்டினர்.

இது குறித்து வால்மீகி மகன் லால் சிங் கூறுகையில், ‘‘உடலை நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது. அதனால் வீட்டில் அருகிலேயே உடலை எரித்தோம்’’ என்றார். இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். ஜாதி பெயரை கூறி இழிவுபடுத்தியதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரரிக்க ஆர்டிஓ மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு கலெக்டர் இளையராஜா உத்தரவிட்டார். ஆர்டிஓ யூனுஸ் குரேஷி மேற்பார்வையில் போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு சென்று சுடுகாட்டு நிலத்தில் இருந்த ஆக்ரமிப்புகளை அகற்றினர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த லோகேந்திரா, அனில் சிங் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், சுடுகாட்டிற்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை ஆக்ரமித்துள்ளனர். அங்கு கடந்த ஆண்டு கோதுமை பயிரிட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும், ‘‘அப்பகுதியில் சுடுகாட்டுக்கு என்று சிறிய அளவிலான நிலத்தை கலெக்டர் சமீபத்தில் ஒதுக்கி கொடுத்துள்ளார். ஆனால், அந்த நிலத்தையும் சில அதிகார வர்க்கம் ஆக்ரமித்து கொண்டுள்ளது. வேறு சுடுகாடு எங்கேயும் கியைடாது. அதனால் இறப்பவர்களின் உடலுக்கு சாலையோரங்களில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு வருகிறது’’ என்று அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.