பாங்காக்

சீன மகளிர் கிரிக்கெட் அணி பாங்காக்கில் நடந்த டி 20 போட்டியில் வெறும் 14 ரன்களுடன் ஆல் அவுட் ஆகி உள்ளது.

சீனாவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு ரசிகர்கள் கிடையாது. அங்குள்ளவர்கள் கிரிக்கெட் பார்ப்பதிலும் விளையாடுவதிலும் சிறிதும் ஆர்வம் காட்டுவதும் இல்லை. அதனால் சீனாவில் கிரிக்கெட்டை பிரபலமாக்க சர்வ தேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி பெரிதும் முயன்று வருகிறது. கடும் முயற்சிக்குப்பின் அந்நாட்டில் ஒரு கிரிக்கெட் அணி உருவாகப்பட்டது.

கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த ஆசிய போட்டியில் சீனா முதல் முறையாக களம் இறங்கியது. இதைப் போலவே கிரிக்கெட் விளையாட்டு அரபு எமிரேட்ஸ், தாய்லாந்து, மலேசியா, மியான்மர், இந்தோநேசியா ஆகிய நாடுகளிலும் அறிமுக நிலையில் உள்ளன. இந்த அணிகளுக்கான டி 20 போட்டிகள் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் கலந்துக் கொண்ட சீன மகளிர் கிரிக்கெட் அணியினர் நேற்று முன் தினம் அரபு எமிரேட்ஸ் அணியுடன் டி 20 போட்டியில் களமிறங்கினர். முதலில் களம் இறங்கிய அரபு எமிரேட்ஸ் அணி 3 விக்கட்டுக்களை இழந்து 203 ரன்கள் எடுத்தது. சீன அணிக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால் அடுத்து களம் இறங்கிய சீன அணியினர் அடுத்தடுத்து விக்கடுகளை இழந்தனர். 10 ஓவர்களில் மொத்தம் 14 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தனர். சீன வீராங்கனை ஹின் லிலி மட்டுமே அதிகபட்ச ரன்களாக 4 ரன்கள் எடுத்தார்.

இது வரை எந்த அணியும் இவ்வளவு குறைவான ரன்களுடன் ஆட்டம் இழந்ததில்லை என்பதால் இது சீன மகளிர் அணியின் வேதனையான ஒரு சாதனை என கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.