ஜெய்ப்பூர்
டிராபிக் போலிசாரின் கிண்டலான விளம்பரத்தால் தான் கவலைப்படவில்லை என பும்ப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.  டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது.

இதையடு்தது பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின்  தொடக்க ஆட்டக்காரரான பகர் சமான் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ப்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

ஆனால் பும்ப்ராவின் கால் க்ரீஸை தாண்டி வெளியே வந்ததால் நோ-பால் என அறிவிக்கப்பட்டது. இதனால் பகர் சமான் அவுட் ஆகாமல் தப்பித்தார். பின்னர் அவர் சதம் அடித்தார்.

அந்த போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. அதற்கு பகர் சமானின் சதமும் காரணம். ஆக, அவருக்கு பந்துவீசிய பும்ப்ராவின் நோ-பால் இந்தியாவின் வெற்றியை பறித்துவிட்டது என்று இந்திய ரசிகர்கள் வருந்தினர்.

இந்த நிலையில்  பும்ப்ராவின் கால் க்ரீஸை விட்டு வெளியே வந்த படத்தை வைத்து ஜெய்ப்பூர் டிராபிக் போலீசார் சாலை பாதுகாப்பு குறித்து  விழிப்புணர்வு விளம்பரம் ஒன்றை உருவாக்கியது.

பும்ப்ரா நோ பால் வீசும்  படத்தை வெளியிட்டு ‘‘கோட்டை கடக்கக்கூடாது. அப்படி கடந்தால் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்’’ என்ற வாசகத்தை எழுதியிருந்தது.

இந்த போஸ்டர் சமூக இணையத்தளத்தில் வைரலாக பரவியது.

இந்த நிலையில் பும்ப்ரா இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதாவது, “‘இந்திய நாட்டிற்காக உங்களுடைய சிறந்த படைப்பை கொடுத்த பிறகு, நீங்கள் எவ்வளவு மரியாதை பெற்றீர்கள் என்பதை இந்த படம் வெளிப்படுத்துகிறது.   வெல்டன் ஜெய்ப்பூர் டிராபிக் போலீஸ்’’ என்று பதிவிட்டிருக்கிறார்.

அடுத்த பதிவில், “இந்த விளம்பரத்தினால் நான் கவலைப்படவில்லை. நீங்கள் இதுபோன்று உங்களுடைய வேலையில் தவறு செய்தால், அதை நான் வேடிக்கையாக  வெளிப்படுத்தமாட்டேன். ஏனென்றால், மனிதர்களால் தவறு செய்வது இயல்பு என்பதை நம்புபவன் நான்” என்று குறிபபிட்டுள்ளார்.