வெலிங்டன்

நியூஜிலாந்து கிரிக்கெட் வீரர் ராஸ் டைலர் தனது குரு மறைந்த மார்டின் குருவ் சாதனையை முறியடித்ததற்காக மன்னிப்பு பிரார்த்தனை செய்தார்.

வெலிங்டனில் தற்போது வங்கதேசம் மற்றும் நியுஜிலாந்து இடையே இரண்டாம் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.   இந்த போட்டியில் நியுஜிலாந்து அணி முதல் இன்னிங்சில் ஆறு விக்கட் இழப்புக்கு 432 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.  மழையின் காரணமாக போட்டி தற்போது தடைபட்டுள்ளது.

இந்த போட்டியில் நியுஜிலாந்து வீரர் ராஸ் டைலர் தனது 18ஆம் செஞ்சுரியை அடித்துள்ளார்.   இவரது கிரிக்கெட் குருவான மறைந்த மார்டின் குருஸ் 17 செஞ்சுரிகள் அடித்துள்ளார்.   டைலர் இதற்கு முன்பு கடந்த 2017 ஆம் ஆண்டு தனது 17 ஆவது செஞ்சுரியை அடித்த போதே குருவின் சாதனையை எட்டியதில் சிறிது மனதளவில் சலனப்பட்டிருந்தார்.

தற்போது 18 ஆம் செஞ்சுரியை அடித்த போது குருவின் சாதனையை முறியடித்ததால் அவர் மீண்டும் மன உளைச்சல் அடைந்தார்.   அதை ஒட்டி தனது குருவை மனதில் நிறுத்தி பிரார்த்தனை செய்த பிறகு குருவின் சாதனையை முறியடித்ததற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஏற்கனவே மொத்த ரன்கள் எடுத்ததில் டைலர் குருவை மிஞ்சி உள்ளார்.  இது குறித்து டைலர் ஒரு மனோதத்துவ நிபுணரை அணுகிய போது அவர் இவருக்கு தைரியம் அளித்து பிரார்த்தனை செய்து மன்னிப்பு கோருமாறு யோசனை அளித்துள்ளார்.  அதையே டைலர் இப்போது பின்பற்றி உள்ளார்.