நித்யானந்தாவின் கைலாசம் தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன என்று கிண்டலடிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சிறுமிகள் கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட புகார்களில் சிக்கியுள்ள நித்யானந்தா, ஈக்வேடார் நாட்டில் உள்ள ஒரு தனித் தீவை சொந்தமாக்கியதோடு, அதற்கு கைலாசம் என்றும் பெயரிட்டுள்ளார். இத்தீவில் இலவச மருத்துவம், இலவச கல்வி போன்றவை வழங்கப்படும் என்றும், அத்தீவிற்கான பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் கூறி, இணையதளம் மூலமாக அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு, சமூகவலைதளத்தில் கிண்டலையும், கேலியையும் செய்யும் விதமாக பலர் பதவிடும் நிலையையும் உண்டாக்கியுள்ளது.

இத்தகைய சூழலில் தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கருத்து பதிவிட்டுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், “நித்யானந்தாவின் கைலாசம் தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன ?” என்று கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார். அஸ்வினின் இப்பதிவை தொடர்ந்து பலரும் இதே கேள்வியை சமூகவலைதளத்தில் முன்வைத்து வருகின்றனர்.