இந்திய கிரிக்கெட் மட்டும் அல்ல உலக அரங்கில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக அனைவராலும் புகழப்படுபவர் சச்சின் டெண்டுல்கர் என்றால் மிகையாகாது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 51 சதங்களும் ஒரு நாள் போட்டிகளில் 49 சதங்களும் விளாசி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 100 சதம் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

ஆரம்ப காலங்கள், இவருக்கு இதுபோல் சிறப்பாக இருந்ததா என்றால் கேள்விக்குறியே என்று சொல்லவேண்டும்.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியுடன் தனது முதல் பயணத்தை தொடங்கிய சச்சின் தனக்கு 16 வயது 205 நாட்கள் ஆகியிருந்த நிலையில், உலகின் இளம் வீரராக பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். தன்னைப்போல் அறிமுக வீரராக பாகிஸ்தான் சார்பில் களமிறங்கிய வக்கார் யூனுஸ் பந்து வீச்சில் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்த தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் இளம் வயதில் களம் கண்ட வீரர் என்ற முறையில் அனைவர் மனத்திலும் இடம்பிடித்தார், இதே பயணத்தில் நடந்த 20 ஓவர் காட்சி போட்டியொன்றில் இவர் 18 பந்தில் 53 ரன்கள் எடுத்தது பாராட்டப்பட்டது.

இதற்கு அடுத்த நியூசீலாந்துக்கு எதிரான தொடரிலும் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லையென்றாலும், அதற்கடுத்த இங்கிலாந்துடனான தொடரில் தனது முதல் சதமடித்து இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற பெயருடன் தனது கிரிக்கெட் இன்னிங்சின் மற்றொரு அத்தியாயத்தை துவக்கிய சச்சின் டெண்டுல்கரின் ஆரம்ப நாட்கள் மிகவும் சோதனையாகவே இருந்தது.

பாகிஸ்தானுக்கு பயணம் செய்த இந்திய அணிக்கு தேர்வாகும் முன்னர் மேற்கு இந்திய தீவுகளுக்கு பயணம் செய்யும் இந்திய அணியில் இடம்பெறுவதாக இருந்த சச்சின் டெண்டுல்கர் அவரது வயது அனுபவம் மற்றும் மே. தீவு பந்துவீச்சாளர்களின் திறமையை கவனத்தில் கொண்டு அந்த பயணத்தில் இடம் பெறவில்லை.

மே. தீவு செல்லும் அணிக்கு சச்சின் டெண்டுல்கர் தேர்வாக இருந்த நிலையில் புகழ் பெற்ற இந்திய சினிமா நடிகர் டாம் ஆல்டர் அவரை பேட்டியெடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.