கொடுங்கோல் ஆட்சியிடமிருந்து மக்களை காப்பாற்றவே கதறுகின்றோம்: பிரதமர் மோடியின் ‘கதறல்’ பேச்சுக்கு ராகுல் காந்தி பதிலடி

புதுடெல்லி:

உங்கள் கொடுங்கோல் ஆட்சி மற்றும் திறமையற்ற நிர்வாகத்திடமிருந்து மக்களை காப்பாற்றவே நாங்கள் கதறுகிறோம் என பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.


கொல்கத்தாவில் எதிர்கட்சிகளின் மெகா பேரணியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்திருந்தார்.

மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு ஒரேயொரு எம்எல்ஏ தான் இருக்கிறார். அதற்கே இவ்வளவு பயமா? நாங்கள் உண்மை என்ற பாதையில் நடக்கின்றோம். அவர்கள் நாடு முழுவதும் கட்சிகளை திரட்டி, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கதறுகிறார்கள் என்று மோடி பேசினார்.

இதற்கு பதில் அளித்து ராகுல் காந்தி டிவிட் செய்திருப்பதாவது:

எங்கள் கதறல், வேலை இன்றி கதறும் லட்சக்கணக்கானோருக்கு உதவியாக இருக்கும். விவசாயிகளுக்கு உதவும், தலித் மற்றும் ஆதிவாசிகளுக்கு உதவும். சிறுபான்மையினத்தவருக்கு உதவும். சிறு வியாபாரிகளுக்கு உதவும்.

இன்னும் 100 நாட்கள் நடைபெறவுள்ள உங்களது கொடுங்கோல் ஆட்சி மற்றும் திறமையற்ற நிர்வாகத்திலிருந்து மக்களை விடுவிப்பதற்காகவே நாங்கள் கதறுகின்றோம்.
இவ்வாறு ராகுல்காந்தி ட்வீட் செய்துள்ளார்.