குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் நிற்க தடை! தேர்தல் ஆணையம்

டில்லி:

குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என பா.ஜ.வின் அஸ்வினி உபாத்யாயா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவின் படி குற்றவாளி என்று நிருபிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் சிறைத் தண்டனை முடிந்த பிறகு, 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது.

இதை ரத்து செய்து,  குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டாலே தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனவும்,  இந்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவினை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மிக முக்கிய அம்சங்களாக உச்ச நீதிமன்றம் அறிவிக்க வேண்டும், 4 சதவிகித சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் நேற்று நடைபெற்ற விசாரணையின்போது,  குற்ற வழக்குகளில் அரசியல்வாதிகள் எத்தனை பேர் தண்டனை பெற்றுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்த நீதிபதிகள், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகளின் பட்டியலை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் விளக்கம் கேட்டு  உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் வழக்கின் இன்றைய விசாணையின்போது, தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருப்பதாவது,

குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாழ் நாள் தடை விதிக்கலாம் என்றும், அவர்களுக்கு  வாழ்நாள் தடை விதித்தால் மட்டும் குற்றச்செயல்களை தடுக்க முடியும் என்று கூறி உள்ளது.

மேலும் இதுகுறித்து முடிவு எடுக்கும்படி மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்துள்ளோம் என்று கூறி உள்ளது.

 

 

 

You may have missed