பிரதமர் மோடியை ‘தேள்’ என்ற  சசி தரூர் மீது அவதூறு வழக்கு

மோடியை ‘சிவலிங்கத்தின் மீதமர்ந்துள்ள தேள்’ என்று பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் மீது டில்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மோடியைப் பற்றி சசி தரூர் எழுதியுள்ள பாரடாக்சியல் பிரைம் மினிஸ்டர் என்ற புத்தகம் குறித்த சந்திப்பு பெங்களூருவில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சசி தரூர், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் மோடியை, சிவலிங்கத்தின் மேல் இருக்கும் தேளைப் போன்றவர் என்றும், அவரைக் கையாலும் அகற்ற முடியாது, காலணியாலும் அடிக்க முடியாது என்றும்    கூறியதாக சசி தரூர் பேசினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்  மோடியை அவமதித்து சசிதரூர் பேசியதாக டில்லி பாஜக தலைவர் ராஜீவ் பப்பார்  டில்லி  உயர்நீதிமன்றதில் வழக்கு தொடுத்துள்ளார்.

அவர் தனது மனுவில், “அவதூறு செய்யும் நோக்கத்துடன் சசி தரூர் பேசிய வார்த்தைகள் இந்துக் கடவுளைக் கேவலப்படுத்துகின்றன. அதோடு  நாட்டின் பிரதமரையும் அவதூறு செய்வதாக அமைந்துள்ளன”து என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், “ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்  6 வருடங்களுக்கு முன்பாக அப்படி பேசினார். அப்போது மோடி பிரதமரும் இல்லை ஆனால் இப்போது மோடியின் புகழ் உலகம் முழுதும் பரவியுள்ளது. தற்போது எங்கிருந்தோ குழிதோண்டி இந்த வர்ணனையை  பயன்படுத்துவது இந்தக் காலக்கட்டத்தில் அவதூறு நோக்கம் கொண்டது என்று  கூறியுள்ளார்.

வழக்கறிஞர் நீரஜ் என்பவர் மூலம் இந்த அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த சசிதரூர், “அவதூறு வழக்கு அற்பத்தனமானது. ‘பேச்சுச் சுதந்திரத்துக்கு எதிரானது’  ஏற்கனவே “வெளியான ஒரு உள்ளடக்கத்திலிருந்து மேற்கோள் கூடக் காட்டக்கூடாது என்று கூறினால் நம் ஜனநாயகம் எங்கு போகிறது? பேச்சுச் சுதந்திரம் எங்கே?” என்று சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.