டில்லி

ங்கிகள் பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டுமெனில் வாராக்கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என கிரைசில் ஆய்வு நிறுவனம் கூறி உள்ளது.

வங்கிகளில் வாராக்கடன் தள்ளுபடி என செய்திகள் வருவதுண்டு.   அதற்காக பலரும் கேள்விகள் கேட்கும் போது அவை தள்ளுபடி செய்யப்படவில்லை எனவும் கணக்கில் ஒரு சொத்தாக காட்டப்படுவதில்லை எனவும் விளக்கம் அளிப்பதுண்டு.  உண்மையில் இந்தக் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதில்லை.   மாறாக அவைகள் செயல்படாத சொத்துக்கள் (Non  performing assets) என்னும் இனத்தின் கீழ் மாற்றப்படுகின்றன.

இது குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் கிரைசிலின் இந்தியக் கிளை ஒரு அறிக்கை அளித்துள்ளது.    அதன் ஆய்வு அதிகாரி பவன் அகர்வால் இது குறித்து, “வங்கிகள் வாராக்கடனை ரத்து செய்வது இல்லை.  பதிலாக செயல்படாத சொத்துக்கள் என்னும் இனத்தின் கீழ் கொண்டு வந்து விடுகின்றன.   இப்படி மாற்றப்பட்ட வகையில் அதிகபட்ச 50 கணக்குகளில் மட்டும் ரூ. 4,25,000 கோடி ரூபாய் முடங்கி உள்ளது.   இதனால் வங்கிகளுக்கும் மற்றும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் எந்த ஒரு பயனும் ஏற்படுவது இல்லை.   வங்கிகள் தனது கணக்கில் நஷ்டம் வராமல் காட்ட மட்டுமே இவை பயன்படுகிறது.

எனவே உபயோகமற்று இருக்கும் இந்தக் கடன்களில் சுமார் 60% வாராக்கடன்களை ரத்து செய்தாலே வங்கிகளின் தேவையற்ற செயல்படாத சொத்துக்களின் சுமை குறையும்.    அது மட்டுமின்றி அவைகளால் ஏற்படும் நஷ்டத்தில் இருந்தும் வங்கிகள் விடுபட முடியும்.    தற்போது அரசு வங்கிகளுக்கு அளிக்க உள்ள உதவித் தொகையை வங்கிகள் முழுமையாக வளர்ச்சிக்கு மட்டும் உபயோகப் படுத்த இந்தக் கடன் தள்ளுபடி பெருமளவில் உதவி புரியும்.     இல்லை எனில் வரும் உதவித் தொகை இந்த வாராக் கடனின் வட்டி இழப்புக்கு மட்டுமே ஈடு கட்ட உபயோகப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது வங்கிகளில் உள்ள மொத்த வாராக்கடன்களின் மதிப்பு ரூ. 8 லட்சம் கோடியை தாண்டி உள்ளது.   இதில் ரூ. 2.11 லட்சம் கோடி மத்திய அரசால் உதவியாக வழங்கப்பட உள்ளது.   அதில் ரூ.1.35 லட்சம் கோடி  மீண்டும் தரப்படும் முதலீட்டுத் தொகையாகவும், மற்றவை கடனாகவும் அளிக்கப்பட உள்ளதாக தெரிய வருகிறது.