மெக்சிகோ தடுப்புச்சுவர் சர்ச்சை: அதிபர் டிரம்புக்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமனறத்தில் வழக்கு!

அமெரிக்கா – மெக்சிகோ இடையே தடுப்புச் சுவர் கட்டும் விவகாரத்தில் அவசர நிலையை பிரகடனப்படுத்திய அதிபர் டிரம்புக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் கட்ட நாடாளுமன்றம் நிதி ஒதுக்காததால் டிரம்ப் அவசர நிலையை கொண்டு வந்தார்.

trum

மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக ஏராளமான அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. அமெரிக்காவுக்குள் அகதிகள் நுழைவதை தடுக்க இரு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய தடுப்புச் சுவரை எழுப்ப அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவெடுத்தார். அதற்காக 5பில்லியன் டாலரை ஒதுக்கீடு செய்யவும் நாடாளுமன்றத்தை டிரம்ப் கேட்டுக் கொண்டார்.

ஆனால், தடுப்புச் சுவர் கட்டுவதற்கு அவ்வளவு தொகையை ஒதுக்க கூடாது என கூறி எதிர்க்கட்சியாக ஜனநாயகக் கட்சி குரல் கொடுத்தது. இதனால் டிரம்ப் கேட்ட நிதியை ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்றம் மறுத்தது. டிரம் கட்சிக்கும், ஜனநாயகக் கட்சிக்கும் இடையே வாக்குவாதம் வலுத்த நிலையில் வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட 9 அரசுத் துறைகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக, அரசு அலுவலகங்கள் தொடர்ந்து முடக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து அமெரிக்காவில் அவரசர நிலையை அதிபர் டிரம்ப் கொண்டு வந்தார். நாட்டில் அவசர நிலையை பிரகடப்படுத்திய டிரம்புக்கு எதிராக சமூக அமைப்புகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், தனது அதிபரின் அதிகாரத்தை பயன்படுத்தி தடுப்புச் சுவர் அமைப்பதில் டிரம் உறுதியாக இருக்கிறார்.

இந்நிலையில் அவசர நிலையை அறிவித்த டிரம்புக்கு எதிராக நியூயார்க் உட்பட 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. சட்ட நடவடிக்கை மூலம் அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவரவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நாடாளுமன்ற ஒப்புதலின்றி தன்னிச்சையாக எல்லைச்சுவர் கட்டுவதற்கு டிரம்ப் நிதி ஒதுக்கியதற்கு எதிராக சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.