பேப்பரில் கூட இல்லாத ஜியோ கல்வி நிறுவனத்துக்கு நிதியுதவி….டுவிட்டரில் வறுத்தெடுப்பு

டில்லி:

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) சமீபத்தில் தலைசிறந்த 6 நிறுவனங்களை தேர்வு செய்தது. இவற்றுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படவுள்ளது.

இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஐஐடி மும்பை, ஐஐடி டில்லி, ஐஐஎஸ்சி பெங்களூர் ஆகிய 3 அரசு நிறுவனங்கள் ஆகும். மீதமுள்ள 3 நிறுவனங்களில் மணிபால் பல்கலைக்கழகம், பிட்ஸ் பிலானி, ஜியோ இன்ஸ்டிடியூட் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

ஜியோ இன்ஸ்டிடியூட் இன்னும் பேப்பர் அளவில் கூட தொடங்கப்படாத ஒரு நிறுவனமாகும். கூகுளில் தேடிப்பார்த்தால் கூட இந்த பெயரில் எந்த நிறுவனமும் இல்லை. பின்னர் எப்படி தலைசிறந்த நிறுவனங்கள் பட்டியலில் ஜியோ இடம்பிடித்தது என்று பலரும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் மத்திய அரசை வறுத்தெடுத்தனர்.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘‘நாட்டில் 800 பல்கலைக்கழகங்கள் உள்ளன. எனினும் உலகின் தலைசிறந்த 200 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் அவை இடம்பெறவில்லை. தற்போது, கல்வி நிபுணர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த 6 நிறுவனங்கள் அந்த இலக்கை எட்டும்’’ என்று டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

‘‘அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்பட உள்ள நிறுவனங்கள் ஆகிய 3 விதிகளின் கீழ் பட்டியல் தயாரிக்கப்பட்டது’’ மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.