டில்லி

டந்த மே மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்றம் ஒருவருக்கு அளித்த தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

 

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு தனது முகநூலில் அப்போதைய நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழங்கிய ஒரு தீர்ப்பை விமர்சித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டார்.  அதையொட்டி அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.   அந்த வழக்கை ரத்து செய்ய அவர் மன்னிப்பு கோர வேண்டும் என அறிவிக்கப்பட்டது.   தற்போது அதைப் போன்ற வேறொரு வழக்கில் வேறு விதமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் வழக்கறிஞரும் பத்திரிகையாளருமான மனீஷ் வசிஷ்டா மீது ஒரு வழக்கில் பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்ற  நீதிபதி இந்தர்ஜித் சிங் அளித்த தீர்ப்பு குறித்து விமர்சித்து அவர் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டார்.  தனது பதிவில் அவர் நீதிபதி தனது தீர்ப்பை வாய்மொழியாக மட்டுமே சொல்லி உள்ளதாகவும் அதை எழுத்து மூலமாக வெளியிட்டிருந்தால் அதில் உள்ள தவறுகள் பற்றி அவர் படிக்கும் போது அவருக்கே தெரிந்திருக்கும் என தெரிவித்திருந்தார்.

இந்த தீர்பை வழங்கிய நீதிபதி இந்தர்ஜித் சிங் இது நீதிமன்ற அவமதிப்பு என வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம் எஸ் பேடி மற்றும் ஹரி பால் வர்மா ஆகியோரி8ன் அமர்வு அவரை குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஒரு மாத சாதாரண சிறைத் தண்டனையை வழங்கியது.  அவர் இது குறித்து விளக்கமோ மன்னிப்போ அளிக்காததால் இந்த தீர்ப்பை ஜூலை 31 ஆம் தேதி அமர்வு வெளியிட்டது.

இதை எதிர்த்து மனிஷ் வசிஷ்டா உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.  இதையொட்டி அவருடைய தண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.  இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ கே சிக்ரி, மற்றும் சுபாஷ் ரெட்டியின் அமர்வு விசாரித்து வந்தது.   நேற்று அமர்வு வழங்கிய தீர்ப்பில் முகநூலில் நீதிபதியை விமர்சிப்பது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் ஆகாது எனக் கூறி பஞ்சாப் அரியானா உயர்நீதிமன்ற தண்டனையை ரத்து செய்துள்ளது.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு இதைப்போல் ஒரு பதிவை முகநூலில் வெளியிட்டபோது அது நீதிமன்ற அவமதிப்பு எனக் கூறி இதே உச்சநீதிமன்றம் அவரை மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.