மோடி மீது விமர்சனம்: ராகுல் உத்தரவால் மன்னிப்பு கேட்ட காங்., தலைவர்

பிரதமர் நரேந்திர மோடியை, ஜாதி ரீதியாக விமர்சனம் செய்த, காங்கிரஸ் மூத்த தலைவர், சி.பி.ஜோஷி, காங்., தலைவர் ராகுலின் உத்தரவால், பகிரங்க  மன்னிப்பு கோரியுள்ளார்.

ராஜஸ்தானை  சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களல் ஒருவர் சி.பி.ஜோஷி. சமீபத்தில் இவர் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, “இந்து மதம் பற்றி பேச, பிராமணர்கள் மற்றும் பண்டிதர்கள் மட்டுமே தகுதியானவர்கள். பிரதமர் நரேந்திர மோடி, உமா பாரதி போன்ற பிற ஜாதியை சேர்ந்தவர்கள்  தற்போது, இந்து மதம் பற்றி பேசி வருகின்றனர். கடந்த, ஐம்பது  ஆண்டுகளில், பிராமணர்களுக்கு புத்தி பேதலித்து விட்டது” என்று பேசினார்.

இவர் பேசிய வீடியோவை, பா.ஜ., வைச் சேர்ந்த, ஹர்ஷ் சங்வி, ‘ட்விட்டர் சமூக தளத்தில் பதிவிட்டார். இதை பலரும் பகிர்ந்தனர். ஜோஷியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஜோஷியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த காங்., தலைவர் ராகுல்,  அவரை மன்னிப்பு கேட்கும்படி,வலியுறுத்தினார்.

ராகுல் வெளியிட்ட, ‘டுவிட்டர்’ பதிவில், ‘சமுதாயத்தின் எந்தவொரு பிரிவினரின் மனதையும் புண்படுத்தும் வகையில், கட்சி தலைவர்கள் கருத்து தெரிவிக்க கூடாது. காங்கிரஸ் கட்சியின் கொள்கை மற்றும் தொண்டர்களின் மன உணர்வை மதித்து, ஜோஷி, தன் தவறை உணர வேண்டும்; தன் கருத்துக்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும்’ என்று பதிவிட்டார்.

இதையடுத்து,  ஜோஷி தனது ட்விட்டர் பக்கத்தல் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘காங்., கொள்கை மற்றும் கட்சி தொண்டர்களின் மன உணர்வுகள் அடிப்படையில், என் கருத்துக்கு மன்னிப்பு கோருகிறேன். ‘என் கருத்து, எந்தவொரு சமூகத்தை புண்படுத்தி இருந்தாலும் வருத்தம் தெரிவிக்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

#criticism #Modi #Rajasthan #Cong #apologize #Rahul #order #c.p.joshi