கொரோனா தடுப்பூசி பற்றி உள்நோக்கத்துடன் கூறவில்லை! நீதிமன்றதுக்கு ஓடிய மன்சூர் அலிகான்…

சென்னை: நடிகர் விவேக் மரணத்தையொட்டி, கொரோனா தடுப்பூசி குறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான், தற்போது கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு  கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே சமீபத்தில், கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட  நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதற்கு கொரோனா தடுப்பூசி காரணம் என விமர்சனம் எழுந்தது.  ஆனால்,  அரசு அதிகாரிகளும், மருத்துவர்களும் விவேக் மரணத்துக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை என விளக்கம் அளித்தனர்.

இதற்கிடையில், விவேக் மரணம் குறித்து து செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்தும் சில கருத்துகளை தெரிவித்தார்.  விவேக் மரணத்தில் தடுப்பு ஊசி தான் காரணம் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு கண்டனம் தெரிவித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் காவல்துறையில் மன்சூர் அலிகான் மீது புகார் அளித்தார்.

புகாரில், கொரோனா  தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் நடிகர் விவேக்குக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும், யாரும் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும், சுகாதாரத் துறை செயலாளர் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்பேரில் வடபழனி போலீசார் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, காவல்துறையினர் கைதில் இருந்து தப்பிக்கும் வகையில், முன்ஜாமின் கோரி மன்சூர் அலிகான்  சென்னை உயர்நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து கூறிய மன்சூர் அலிகான்,  கொரோனா தடுப்பூசி பற்றி உள்நோக்கத்துடன் கருத்து கூறவில்லை என்றும், தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் கூறினேன் என்றும் மன்சூர் அலிகான் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.