சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு நிதி உதவி மற்றும் தங்கம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து விமர்சிக்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தி.மு.கவின் தேர்தல் அறிக்கை மார்ச் 13ம் தேதி வெளியிடப்பட்டது. இதனை ஸ்டாலின் அறிவாலயத்தில் வெளியிட்டார். அப்போது, முக்கிய அம்சங்கள் என்று சிலவற்றை ஸ்டாலின் அறிவிப்பாக வெளியிட்டார். அந்த அறிவிப்புகள் தவிர இதர திட்டங்கள் தேர்தல் அறிக்கை புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டு எள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

தேர்தல் அறிக்கையில் 259வதாக குறிப்பிடப்பட்டுள்ள அம்சத்தில், “கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிற இனத்தவரை மணந்து கொண்டால் 60 ஆயிரம் ரூபாய் நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்கக் காசு வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மற்ற சாதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   தமிழகத்தின் அமைதியை சீர்குலைத்து சாதிய மோதல்களை ஏற்படுத்தும் விதமாக திமுக தேர்தல் அறிக்கை  அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் கடுரமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.  

அமைதியாக உள்ள தமிழகத்தில் இளம் ஆண்களை தூண்டி , சாதிய மோதல்களை உருவாக்க தி.மு.க திட்டமிட்டுள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அது தொடர்பான ஆடியோ, வீடியோக்கள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.

கலப்புத் திருமணம் என்பது ஆண் – பெண் என்ற இருவருக்கு இடையே நிகழும் இயற்கையான விஷயம், இதற்கு சாதிய சாயம் பூசுவது என்பது உள் நோக்கம் என்றும், தி.மு.கவின் இந்த அறிவிப்பு பெண்களை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக பெண்கள் அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

உயர் சாதி பெண்களை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகை என்பதன் மூலம் பட்டியலின சமூகத்தினரை தி.மு.க தூண்டிவிட்டு ஆட்சியை பிடிக்க நினைப்பதாகவும் சமூக வலைதளங்களில் பொது மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமூக நீதியை நிலை நாட்டுவதாக கூறிக் கொண்டு உண்மையில் சமூக சீர்குலைவுக்கான அறிவிப்புகளை தி.மு.க வெளியிட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக,  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்திடம்  புகார் அளித்துள்ளதாக கூறினார். அப்போது, சாதி மோதலை தூண்டும் வகையில் சிலர் திட்டமிட்டு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.  திமுக தேர்தல் அறிக்கையை திரித்து யூடியூபில் பெண் ஒருவர் பேசியுள்ளார். கலப்பு திருமணம் செய்துகொள்வதை ஊக்குவிக்கும் சமுதாயப் புரட்சித் திட்டம் அண்ணா ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது. 1997ம் ஆண்டில் கலப்பு திருமணம் செய்யும் திட்டத்துக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்கப்பட்டது. கலப்பு திருமண உதவித் திட்டத்துக்கு ரூ.60 ஆயிரமாக உயர்த்தி, ஒரு சவரன் வழங்க திமுக வாக்குறுதி அளித்துள்ளது. சாதி மோதல்களை உருவாக்கும் வகையில் யூடியூபில் ஒரு அம்மையார் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதனையடுத்து, திமுகவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு பிரச்சாரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டாலினுக்கு எதிராக திட்டமிட்டு உள்நோக்கத்துடன் தவறான பிரச்சாரம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தி இருப்பதாக கூறினார்.

இந்த நிலையில், திமுகவின் கலப்பு திருமண உதவி திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில்  வீடியோ வெளியிட்ட பெண் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருப்பதாகவும், அதை வாட்ஸ்அப் உள்பட சமுக வலைதளங்களில் பகிரவும் தடை விதித்துள்ளதாக திமுகவின் சட்டத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கலப்புத் திருமணத்திற்கான நிதியுதவி அதிகரிக்கப்படும் என்பதைத் திரித்துக் கூறி சமூக வலைதளங்களில் பரப்பிய பெண் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.