மோடி திறந்து வைத்த சிலையால் முதலைகள் அவதி

ர்மதா

ற்றுமை சிலை அமைக்கப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையில் உள்ள முதலைகளை அங்கிருந்து அகற்றும் பணி நடந்து வருகிறது.

ஒற்றுமை சிலை என அழைக்கப்படும் சர்தார் படேலின் சிலை குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை அருகே அமைந்துள்ளது.   இந்த வளாகத்தில் உள்ள குளங்களில் அரியவகை முதலைகள் வசித்து வருகின்றன.   இந்த முதலைகள் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றன.   இந்த முதலைகளால் இந்த சிலையைக் காண வரும் பயணிகள் அச்சம் கொண்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.

மேலும் இங்கு தற்போது ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவதால் முதலைகளுக்கும் இடைஞ்சல் உண்டாகலாம் என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.   இந்தப் பகுதியில் உள்ள நான்கு குளங்களில் சுமார் 500 முதலைகள் வசித்து வருவதால் அவற்றை மீனை வைத்து பிடித்து கூண்டுகள் மூலம் வனத்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இதுவரை 15 முதலைகள் மட்டுமே பிடிக்கப்பட்டு அகற்றபட்டுள்ளன.   மற்ற முதலைகளை பிடிக்கும் பணி நடந்து வருகிறது.   பல வருடங்களாக பிடிபடும் முதலைகளை இங்கு கொண்டு வந்து விடுவது வனத்துறையினருக்கு வழக்கமாக இருந்து வந்துள்ளது.   முதலைகள் வசிக்க வசதியான இடம் என்பதால் இங்கு ஆற்றில் இருந்து கால்வாய் வழியாகவும் பல முதலைகள் தாங்களே நீந்தி வருவது வழக்கமாகும்.

தற்போது இந்த முதலைகள் இடமாற்றம் செய்யப்படுவது சரியல்ல என வடோதாரா மாவட்ட சமுதாய விஞ்ஞான மைய தலைவர் ஜிதேந்திரா கூறி உள்ளார்.  அவர், “தற்போது இந்த முதலைகள் அணையின் உள் இருக்கும் ஆற்றுத் தண்ணீரில் விடப்படுகின்றன.   இந்த பகுதியில் கரை 40டிகிரிக்கு அதிகமாக சாய்வாக இருந்தால் பெண் முதலைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்ய முடியாது.

அத்துடன் எத்தனை முதலைகள் உள்ளன என்பது குறித்து சரியாக தெரியாத நிலையில் அவை அனைத்தையும் அணையினுள் விட முடிவு செய்துள்ளது சரியல்ல.   கோடிக்கணக்கில் செலவு செய்து உலகின் உயரமான சிலையை நிறுவியவர்கள் இந்த முதலைகள் வசிக்க வேறு ஒரு ஏரியை அமைத்து இருக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.