தனியார் பயிர் காப்பீட்டு நிறுவனங்களுக்கு 3 ஆயிரம் கோடி லாபம்: அரசு நிறுவனங்களுக்கு 4 ஆயிரம் கோடி இழப்பு

புதுடெல்லி:

பயிர் காப்பீட்டில் தனியார் நிறுவனங்கள் ரூ.3 ஆயிரம் கோடி வரை லாபம் ஈட்டியுள்ளன. அதேசமயம், அரசுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளன.


இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுத் துறையின் வருடாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

பயிர் காப்பீட்டு ப்ரீமியம் வசூல் மற்றும் விவசாயிகள் இழப்பீடு கோருதல் ஆகியவற்றுக்கான வித்தியாசம் தனியார் நிறுவனங்களைப் பொருத்தவரை லாபகரமானதாகவே உள்ளது.

அதேசமயம், அரசின் கீழ் இயங்கும் இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனத்தின் வர்த்தகம் பெரும் இழப்பால் பாதிப்பு அடைந்துள்ளது.

அரசு நிறுவனங்களில் ப்ரீமியம் வருவாய் ரூ. 7,894 கோடியாகவும், இழப்பீடு கோருவது ரூ. 12,339 கோடியாகவும் உள்ளது. 2018-ம் ஆண்டு மார்ச் இறுதி கணக்கின்படி, இந்த நிறுனத்துக்கு ரூ. 4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதேசமயம்,தனியார் காப்பீட்டு நிறுவனமான ஐசிஐசிஐ லேம்பார்டு, பயிர் காப்பீட்டு வர்த்தகத்தில் லாபம் ஈட்டியுள்ளது.

இந்த நிறுவனம் ப்ரீமியமாக ரூ.2,371 கோடி வசூலித்துள்ளது. அதேசமயம், இழப்பீடாக 1,362 கோடி வழங்கியுள்ளது.

ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், 50 சதவீதத்துக்கு அதிகமான லாபத்தோடு ப்ரீமியம் 1.181 கோடி வசூலித்துள்ளது. ரூ.475 கோடி மட்டுமே இழப்பீடு வழங்கியுள்ளது .

அனைத்து தனியார் பயிர் காப்பீட்டு நிறுவனங்களும் ப்ரீமியமாக ரூ. 11,905 வசூலித்துள்ளன. இழப்பீடாக ரூ.8,831 கோடி வழங்கியுள்ளன.

அரசு நடத்தும் காப்பீட்டு நிறுவனங்கள் ரூ. 13,411 கோடி ப்ரீமியம் வசூலித்துள்ளன. ரூ.17,496 கோடி இழப்பீடு வழங்கியுள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, விவசாயிகளுக்காக பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோச்சனா என்ற திட்டத்தை கொண்டு வந்தது.
எனினும், இந்த திட்டம் உண்மையிலேயே விவசாயிகளுக்கு நன்மை பயக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: அரசு நிறுவனங்கள் இழப்பு, தனியார் பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் லாபம்
-=-