நாடு முழுதும்  பயிர்க்கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்!: அன்புமணி ராமதாஸ்

 

சென்னை-

நாடுமுழுதும் உள்ள உழவர்கள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று  பா.ம.க. இளைஞரணி தலைவர்  அன்புமணி ராமதாஸ் மத்திய அரசை  வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

பயிர்க்கடன் தள்ளுபடி 

நாடு முழுவதும் உள்ள உழவர்களின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. அதேநேரத்தில் உத்தரபிரதேச விவசாயிகளின் பயிர்க்கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஏதோ ஒரு வகையில் விவசாயத்தை சார்ந்திருக்கும் நிலையில், ஒரு மாநிலத்தில் உள்ள உழவர்களுக்கு மட்டும் பயிர்க்கடன் தள்ளுபடி சலுகை வழங்குவது நியாயமற்றது; இதை ஏற்க முடியாது.

ஒரு மாநிலத்துக்கு மட்டும் சாதகமா? 

ஒப்பீட்டளவில் பார்த்தால் உத்தரப்பிரதேச உழவர்களைவிட தமிழ்நாட்டு உழவர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வயலில் பயிர்கள் வாடிக்கிடப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிரிழக்கிறார்கள் என்றால் அவர்கள் எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கும், இழப்புக்கும் ஆளாகியிருப்பார்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பா.ஜ.க.வுக்கு வாக்களித்த விவசாயிகளுக்கு மட்டும் கடன் தள்ளுபடி; மற்ற மாநில உழவர்களுக்கு கடன் தள்ளுபடி இல்லை என்பது எந்த வகையிலும் நியாயமாக இருக்காது. மாறாக, பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றால் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுவதைப்போல் தான் மத்திய மந்திரியின் அறிவிப்பு அமைந்திருக்கிறது. அனைவருக்கும் பொதுவாக செயல்பட வேண்டிய மத்திய அரசு ஒரு மாநில உழவர்களுக்கு மட்டும் சாதகமாக செயல்பட்டு உழவர்களிடையே பிளவை ஏற்படுத்தக்கூடாது.

மத்திய அரசு நடவடிக்கை 

எனவே, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து உழவர்களும் மீளமுடியாத கடன் வலையில் சிக்கியுள்ளனர் என்பதை உணர்ந்து, அனைத்து மாநில உழவர்களும் பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.